LOADING...
"ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக் வந்தாச்சு!" பிளையிங் ஃபிளீ C6 விலை மற்றும் சிறப்பம்சங்கள்
ராயல் என்ஃபீல்டு பிளையிங் ஃபிளீ C6 அறிமுகம்

"ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக் வந்தாச்சு!" பிளையிங் ஃபிளீ C6 விலை மற்றும் சிறப்பம்சங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 09, 2026
07:24 pm

செய்தி முன்னோட்டம்

நீண்ட கால எதிர்பார்ப்புக்குப் பிறகு, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய 'பிளையிங் ஃபிளீ' (Flying Flea) என்ற பிராண்டின் கீழ் முதல் எலக்ட்ரிக் பைக்கான 'FF.C6' மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. நகர்ப்புறப் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக், ரூ.2.79 லட்சம் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. குறிப்பாக, 'பேட்டரி-அஸ்-ஏ-சர்வீஸ்' (BaaS) என்ற புதிய திட்டத்தின் கீழ், பேட்டரி இல்லாமல் பைக்கை மட்டும் ரூ.1.99 லட்சத்திற்கு வாங்க முடியும். 1940களில் ராணுவப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு பிளையிங் ஃபிளீ பைக்கின் நினைவாக, அதே கிளாசிக் தோற்றத்துடன் நவீனத் தொழில்நுட்பங்கள் இணைந்து இந்த எலக்ட்ரிக் பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

செயல்திறன்

வேகம் மற்றும் பேட்டரி செயல்திறன்

பிளையிங் ஃபிளீ C6 பைக்கில் 3.91kWh லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 15.4kW (21bhp) பவரையும், 60Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. வெறும் 124 கிலோ எடை மட்டுமே கொண்ட இந்த பைக், நகர்ப்புற நெரிசல்களில் மிக எளிதாகச் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 154 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 115 கிமீ ஆகும். மேலும், 16A சாக்கெட்டைப் பயன்படுத்தி வெறும் 60 நிமிடங்களிலேயே 20% முதல் 80% வரை பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளும் 'ரேபிட் சார்ஜிங்' வசதியும் இதில் உள்ளது.

வசதிகள்

அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வசதிகள்

தொழில்நுட்ப ரீதியாக இந்த பைக் ஒரு ஸ்மார்ட்போனைப் போலவே செயல்படுகிறது. இதில் வைஃபை, ப்ளூடூத் மற்றும் 4ஜி கனெக்டிவிட்டி வசதிகள் உள்ளன. மேலும், 'ஓவர்-தி-ஏர்' (OTA) அப்டேட்கள் மூலம் பைக்கின் மென்பொருளைத் தானாகவே மேம்படுத்திக்கொள்ளலாம். பாதுகாப்பிற்காக லீன்-ஆங்கிள் சென்சிங் ஏபிஎஸ் (ABS), டிராக்ஷன் கன்ட்ரோல், குரூஸ் கன்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்ட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. டிஎஃப்டி (TFT) தொடுதிரை மூலம் நேவிகேஷன் மற்றும் பிற வசதிகளை எளிதாகக் கையாள முடியும். லைவ் லொகேஷன் ஷேரிங் மற்றும் பைக் கீழே விழுந்தால் எச்சரிக்கை செய்யும் 'டிப்-ஓவர் அலர்ட்' ஆகிய வசதிகள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

Advertisement

வடிவமைப்பு

வடிவமைப்பு மற்றும் விற்பனை விபரம்

இந்த பைக்கின் வடிவமைப்பு பழமையையும் புதுமையையும் இணைக்கும் விதமாக அமைந்துள்ளது. குறிப்பாக, அலுமினியத்தால் செய்யப்பட்ட 'கிர்ட்டர் ஃபோர்க்' (Girder fork) மற்றும் பேட்டரியில் உள்ள சிறகு போன்ற அமைப்புகள் இதற்கு ஒரு தனித்துவமான தோற்றத்தைத் தருகின்றன. பிளீ கிரீன் (Flea Green) மற்றும் ஸ்டார்ம் பிளாக் (Storm Black) ஆகிய இரண்டு நிறங்களில் இந்த பைக் கிடைக்கிறது. பெங்களூர் ஜெயநகரில் உள்ள ராயல் என்ஃபீல்டின் முதல் பிரத்யேக விற்பனை மையத்தில் ஏப்ரல் 10, 2026 நண்பகல் 12 மணி முதல் முன்பதிவு மற்றும் டெஸ்ட் ரைடு தொடங்குகிறது. மே மாத இறுதியில் இருந்து வாடிக்கையாளர்களுக்குப் பைக் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement