LOADING...
ஃப்ளிப்கார்ட்டுடன் கூட்டு சேர்ந்த ராயல் என்ஃபீல்டு: ஆன்லைனில் விற்பனைக்கு வரும் பைக்குகள்
ராயல் என்ஃபீல்டு மற்றும் ஃப்ளிப்கார்ட் கூட்டு

ஃப்ளிப்கார்ட்டுடன் கூட்டு சேர்ந்த ராயல் என்ஃபீல்டு: ஆன்லைனில் விற்பனைக்கு வரும் பைக்குகள்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 20, 2025
10:26 am

செய்தி முன்னோட்டம்

இந்திய இரு சக்கர வாகன சந்தையில் ஒரு முக்கிய நகர்வாக, ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, முன்னணி இ காமர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த கூட்டாண்மை, ராயல் என்பீஃல்டின் இரு சக்கர வாகனங்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறையாகும். அதன் பிரபலமான 350சிசி மாடல்கள் செப்டம்பர் 22 முதல் ஃப்ளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும். இந்த விற்பனை, ஃபிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனை மற்றும் புதிய ஜிஎஸ்டி விலைக் குறைப்புகளுடன் இணைந்து தொடங்குகிறது. ஆரம்பத்தில், இந்த ஆன்லைன் விற்பனை பெங்களூர், குருகிராம், கொல்கத்தா, லக்னோ மற்றும் மும்பை ஆகிய ஐந்து முக்கிய நகரங்களில் மட்டுமே கிடைக்கும்.

மாடல்கள்

ஆன்லைன் விற்பனை மாடல்கள்

இந்த நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள், புல்லட் 350, கிளாசிக் 350, ஹண்டர் 350, கோன் கிளாசிக் 350 மற்றும் புதிய மீட்டியோர் 350 போன்ற மாடல்களைத் தேர்ந்தெடுத்து, பல்வேறு கட்டண விருப்பங்களைப் பயன்படுத்தி வாங்கலாம். மேலும், வாடிக்கையாளர்கள் ஜிஎஸ்டி சலுகைகளையும் முழுமையாகப் பெற முடியும். ராயல் என்பீஃல்டின் தலைமை செயல் அதிகாரி பி.கோவிந்தராஜன், இன்றைய டிஜிட்டல் உலகில் உள்ள வாடிக்கையாளர்களை எளிதாக சென்றடைய இந்த கூட்டு ஒரு முக்கிய படி என்றார். ஃப்ளிப்கார்ட்டில் ஆன்லைனில் வாங்கும் வசதி இருந்தாலும், பைக்குகளை டெலிவரி செய்வது அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மூலமாகவே நடைபெறும் என்றும், இதன்மூலம் வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்தார். இந்த திட்டம் எதிர்காலத்தில் மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.