ரோல்ஸ் ராய்ஸ் உருவாக்கிய பிரத்தியேகமான 'கோஸ்ட்' மாடல் கார்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தங்களுடைய பாரம்பரியமான வரலாற்றைக் கொண்டாடும் விதமாக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கோஸ்ட் மாடலை காரை வெளியிட்டிருக்கிறது இங்கிலாந்தைச் சேர்ந்த சொகுசு கார்கள் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ். மே 4, 1904-ல் சார்லஸ் ரோல்ஸ் மற்றும் ஹென்றி ராய்ஸ், ஆகிய இருவரும் மான்செஸ்டர் நகரில் உள்ள மிட்லாண்டு ஓட்டலில் சந்தித்த போது தான் வரலாற்று சிறப்புமிக்க ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. மான்செஸ்டர் நகருக்கு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் இருக்கும் பந்தத்தைக் வெளிப்படுத்தும் வகையில் 'ரோல்ஸ் ராய்ஸ் மான்செஸ்டர் கோஸ்ட்' காரை உருவாக்கி வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். ஒரே ஒரு கார் மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதன் விலையை ரகசியமாக வைத்திருக்கிறது அந்நிறுவனம். இந்தியாவில் இதன் சாதாரண மாடலின் விலை ரூ.6.95 கோடி.
என்ன ஸ்பெஷல்:
மான்செஸ்டர் நகரின் சிறப்புகளை பிரதிபலிக்கும் வண்ணம் இந்தக் காரை வடிவமைத்திருக்கிறது ரோல்ஸ் ராய்ஸ். அந்நகரின் சின்னமாக விளக்கும் மான்செஸ்டர் தேனீயின் படத்தை காரின் சி பில்லரிலும், காரின் இருக்கையிலும் கொடுத்திருக்கிறது ரோல்ஸ் ராய்ஸ். மான்செஸ்டரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் பெயர்கள் பின்பக்க சீட்டின் நடுவில் பிரத்தியேக நூலைக் கொண்டு எம்பிராய்டரி செய்யப்பட்டிருக்கிறது. 2004-ல் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இருந்த இரண்டு பேராசிரியர்கள் மிகவும் லேசான, ஆனால் உறுதியுள்ள கிராபீனைப் பிரித்தெடுத்தார்கள். அந்தக் கண்டுபிடிப்பு மான்செஸ்டர் நகரின் வளர்ச்சிக்கும் வித்திட்டது. அதனைக் கொண்டாடும் விதமாக காரின் உள்பக்கத்தில் உள்ள மேல்பரப்பை கிராபீனின் வடிவத்தை ஒத்திருப்பது போல வடிவமைத்திருக்கிறார்கள். இப்படி அந்தக் காரின் ஒவ்வொரு பாகத்திலும் அந்நகரின் பெருமையை கொண்டாடும் வகையில் வடிவமைத்திருக்கிறது ரோல்ஸ் ராய்ஸ்.