
விலை உயர்வு, புதிய அறிமுகம்.. இந்தியாவில் ஹோண்டாவின் திட்டம் என்ன?
செய்தி முன்னோட்டம்
ஜூன் 1 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் செடான்களான அமேஸ் மற்றும் சிட்டியின் விலையை உயர்த்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஹோண்டா.
தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வைச் சமாளிக்க இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
ஜூன் 1 முதல் மேற்கூறிய இரண்டு செடான்களின் அனைத்து வேரியன்ட்களின் விலையையும் 1% அதிகரிப்பதாக அறிவித்திருக்கிறது ஹோண்டா.
தற்போது ஹோண்டா அமேஸானது ரூ.6.99 லட்சம் தொடங்கி ரூ.9.6 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஹோண்டா சிட்டியானது ரூ.11.55 லட்சம் தொடங்கி அதன் ஸ்ட்ராங் ஹைபிரிட் மாடல்களுடன் சேர்த்து ரூ.20.39 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எனினும், இந்த விலைஉயர்வு ஹைபிரிட் மாடல்களுக்குப் பொருந்தாது எனத் தெரிவித்திருக்கிறது ஹோண்டா.
ஹோண்டா
ஹோண்டாவின் புதிய அறிமுகம்:
இதுதவிர வரும் ஜூன் மாதம் இந்தியாவில் புதிய மாடல் எஸ்யூவி ஒன்றையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது ஹோண்டா.
ஜூன் 6-ம் தேதி தங்களுடைய புதிய எலிவேட் எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது ஹோண்டா.
ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் மாருதி சுஸூகி கிராண்டு விட்டாரா ஆகிய கார் மாடல்களுக்குப் போட்டியாக புதிய எலிவேட் எஸ்யூவியை களமிறக்கவிருக்கிறது ஹோண்டா.
இந்த புதிய எலிவேட்டை உலகின் பல நாடுகளில் அதிகரித்து வரும் எஸ்யூவிக்களுக்கான டிமாண்டை மனதில் வைத்தே உருவாக்கியிருக்கிறது ஹோண்டா. மேலும், முதலில் இந்தியாவிலும், அதனைத் தொடர்ந்து மற்ற நாடுகளிலும் புதிய எலிவேட்டை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
இந்த மாதத் தொடக்கத்தில் தான் புதிய எஸ்யூவியின் பெயரை அறிவித்தது ஹோண்டா.