இந்தியாவில் தங்களுடைய விலையுயர்ந்த கார் மாடலை வெளியிட்டிருக்கும் போர்ஷே
இந்தியாவில் தங்களுடைய புதிய '911 S/T' ஸ்போர்ட்கார் மாடலை வெளியிட்டிருக்கிறது போர்ஷே. தங்களுடைய லைன்அப்பில் இடம்பெற்றிருக்கும் 911 மாடலை அறிமுகப்படுத்தி 60 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில், இந்த 911 S/T மாடலை இந்த மாதத் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருந்தது அந்நிறுவனம். மொத்தம் 1,963 911 S/T கார்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது போர்ஷே. தங்களுடைய லைன்அப்பில் உள்ள GT3 RS மாடலை அடிப்படையாகக் கொண்டு இந்த S/T மாடலை வடிவமைத்திருக்கிறது போர்ஷே. ஸ்பெஷல் எடிஷன் மாடலின் என்பதால், 911 S/T என மாடல் லோகோவையும், போர்ஷே என நிறுவனத்தின் லோகோவையும் தங்கத்தில் செய்து பயன்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.
போர்ஷே 911 S/T: இன்ஜின் மற்றும் விலை
ரேஸ் ட்ராக்கில் மட்டுமல்லாது, சாதாரணமாக சாலைகளிலும் பயன்படுத்தும் வகையில் இந்தப் புதிய காரை வடிவமைத்திருக்கிறது போர்ஷே. இந்தப் புதிய காரில், GT3 RS-ல் அந்நிறுவனம் பயன்படுத்தியிருக்கும், 525hp பவர் மற்றும் 465Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய, அதே 4.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸூடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜின் 100கிமீ வேகத்தை 3.7 நொடிகளில் எட்டிப் பிடிக்கிறது. ரூ.4.26 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையுடன், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் போர்ஷே மாடல்களிலேயே விலையுயர்ந்த மாடலாக வெளியாகியிருக்கிறது 911 S/T. இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும், 911 கார் மாடல்களின் வரிசையில் 8வதாக இணைகிறது இந்த 911 S/T.