LOADING...
ஏப்ரல் 10 முதல் சுங்கச்சாவடிகளில் 'நோ கேஷ்': புதிய விதிகள் இதோ
வாகன நெரிசலைக் குறைக்கவும் கொண்டு வரப்பட்டுள்ளது இந்த புதிய விதிமுறை

ஏப்ரல் 10 முதல் சுங்கச்சாவடிகளில் 'நோ கேஷ்': புதிய விதிகள் இதோ

எழுதியவர் Venkatalakshmi V
Apr 06, 2026
11:06 am

செய்தி முன்னோட்டம்

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் ரொக்கப் பணம் பெறுவது முற்றிலும் நிறுத்தப்படும் என மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலைக் குறைக்கவும் கொண்டு வரப்பட்டுள்ளது இந்த புதிய விதிமுறை. மத்திய அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, இனி ஃபாஸ்டேக் மற்றும் UPI ஆகிய இரண்டு வழிகளில் மட்டுமே சுங்கக்கட்டணம் செலுத்த முடியும். ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் யுபிஐ மூலம் கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படும். இருப்பினும், யூபிஐ கட்டணம் சாதாரண கட்டணத்தை விட 1.25 மடங்கு கூடுதலாக வசூலிக்கப்படும். ஒருவேளை UPI மூலமும் பணம் செலுத்த மறுத்தால், தேசிய நெடுஞ்சாலை விதிகளின்படி அந்த வாகனம் நெடுஞ்சாலையில் நுழைய அனுமதி மறுக்கப்படும் அல்லது அகற்றப்படும்.

விவரங்கள்

கட்டணச் சலுகை மற்றும் ஆண்டு பாஸ் விவரங்கள்

தற்போது நடைமுறையில் உள்ள அடையாள அட்டைகளைக் காண்பித்து கட்டண விலக்கு கோரும் முறை இனி செல்லுபடியாகாது. தகுதியுள்ள நபர்களுக்கு "விலக்கு அளிக்கப்பட்ட ஃபாஸ்டேக்" (Exempted FASTags) வழங்குவது குறித்து அரசுத் துறைகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அடிக்கடி பயணம் செய்பவர்களுக்காக 3,075 ரூபாய்க்கு வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 200 முறை சுங்கச்சாவடிகளைக் கடக்க முடியும். இந்த வசதியைப் பெற விரும்பும் வாகன ஓட்டிகள் தங்களது ஃபாஸ்டேக் கணக்கை வங்கி அல்லது வாலட்டுடன் இணைத்து செயல் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.

தொழில்நுட்பம்

தடையற்ற பயணம்: புதிய கேமரா தொழில்நுட்பம்

தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(NHAI) 'Multi-lane free-flow' எனப்படும் தடையற்ற சுங்க வசூல் முறையைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த முறையில் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டிய அவசியமில்லை. மேம்படுத்தப்பட்ட கேமராக்கள் மற்றும் RFID ரீடர்கள் மூலம் வாகனங்கள் கடந்து செல்லும் போதே கட்டணம் தானாகவே கழிக்கப்படும். ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு e-notice அனுப்பப்படும் என்றும், அவ்வாறு நிலுவையில் உள்ள கட்டணங்களுக்கு இருமடங்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றங்கள் ஏப்ரல் 10 முதல் அமலுக்கு வருவதால், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் தங்களது ஃபாஸ்டேக் கணக்குகளைச் சரிபார்த்துத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Advertisement