சீனாவில் கார்களை உற்பத்தி செய்து பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டு வரும் நிஸான்
சீனாவில் உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் கார்களை உலகளவில் விற்பனை செய்யத் திட்டமிட்டு வருகிறது ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான். மேலும், சீனாவில் தங்களுடைய எலெக்ட்ரிபிகேஷன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை அதிகரிக்க, அந்நாட்டின் முக்கிய கல்வி நிறுவனங்களுடன் கைகோர்த்திருக்கிறது நிஸான். தங்கள் நிறுவனத்தின் எரிபொருள் வாகனங்கள், முழுமையான எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பிளக்-இன் எலெக்ட்ரிக் வாகனங்கள் என அனைத்து வகையான கார்களையும் சீனாவிலேயே உற்பத்தி செய்து பிற உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார், நிஸானின் சீனத் தலைவரும், நிஸான் மோட்டர்ஸின் துணைத் தலைவருமான மசாசி மட்சுயாமா.
நிஸானின் திட்டம் என்ன?
அதிகரித்து வரும் போட்டியின் காரணமாக, நிஸான் நிறுவனத்தின் விற்பனை சீனாவில் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்தாண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை உலகளாவிய நிஸான் கார்களின் விற்பனையில் 20% மட்டுமே சீனாவில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இது கடந்தாண்டு இதே காலக்கட்டத்தை விட 13% குறைவு. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் நிஸான் நிறுவனத்தின் சீன வாகன விற்பனை அளவு 33% ஆக இருந்தது. சீனாவில் வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான செலவு மிகவும் குறைவு. எனவே, டெஸ்லா, பிஎம்டபிள்யூ மற்றும் போர்டு ஆகிய நிறுவனங்களைப் பின்பற்றி நிஸானும் சீனாவில் வாகனங்களை உற்பத்தி செய்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டிருக்கிறது.