'நைட்ஸ்டர் 440' என்ற பெயரில் புதிய பைக்கை வெளியிடவிருக்கிறதா ஹார்லி டேவிட்சன்?
இந்தியாவின் ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தங்களது முதல் பைக் மாடலான X440 பைக்கை இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிட்டது ஹார்லி டேவிட்சன். அதனைத் தொடர்ந்து தற்போது மற்றொரு பைக் மாடலையும் இந்தியாவில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 'நைட்ஸ்டர் 440' என்ற பெயரை இந்தியாவில் ட்ரேடுமார்க் செய்ய பதிவு செய்திருக்கிறது ஹீரோ நிறுவனம். ஏற்கனவே நைட்ஸ்டர் என்ற பெயரில் 975சிசி இன்ஜின் கொண்ட லக்சரி பைக் ஒன்றை சர்வதேச சந்தையில் ஹார்லி டேவிட்சன் விற்பனை செய்து வருகிறது. எனவே, இந்த பைக்கின் டிசனையும், இந்த மாதத் தொடக்கத்தில் வெளியான X440 மாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இன்ஜினைக் கொண்டும் புதிய பைக்கை ஹார்லி வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் 440:
இந்த புதிய பைக்கானது எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் எதுவும் அதிகாரப்பூர்வாகப் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. எனினும், விரைவில் வெளியாகும் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைட்ஸ்டர் லக்சரி பைக்கின் டிசனை அப்படியே இந்த சிறிய 440 இன்ஜினுடன் இணைக்க ஹார்லி டேவிட்சன் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரே இன்ஜின் என்றாலும், இந்த புதிய பைக்கானது X440-யை விட நல்ல ஹேண்டிலிங் மற்றும் ஸ்டெபிலிட்டியைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. X440-ல் பயன்படுத்தப்பட்ட, 26.63hp பவர் மற்றும் 38Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய, சிங்கிள்-சிலிண்டர் கொண்ட, ஆயில்-கூல்டு 440சிசி இன்ஜினையே சிறிய நைட்ஸ்டருக்கும் கொடுக்கவிருக்கிறது ஹார்லி.