 
                                                                                ஃபாஸ்டேக் பயனர்களுக்கு மிகப் பெரிய நிம்மதி: KYV சரிபார்ப்பு செயல்முறையை எளிதாக்கியது NHAI
செய்தி முன்னோட்டம்
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) 'உங்கள் வாகனத்தை அறிந்துகொள்ளுங்கள்' (KYV - Know Your Vehicle) சரிபார்ப்புச் செயல்முறையை எளிமையாக்கியதன் மூலம் ஃபாஸ்டேக் பயனர்களுக்குப் பெரிய நிவாரணத்தை வழங்கியுள்ளது. இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் லிமிடெட் (IHMCL) வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள், பயனர்களுக்கு அதிக வசதியை அளிப்பதையும், ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. சமீபத்திய புதிய விதிகளின்படி, இனி வாகனங்களின் பக்கவாட்டுப் புகைப்படங்கள் பதிவேற்றப்படத் தேவையில்லை. கார், ஜீப் மற்றும் வேன் போன்ற வாகனங்களுக்கு, வாகனத்தின் முகப்புப் பகுதி மற்றும் அதில் ஒட்டப்பட்டுள்ள ஃபாஸ்டேக்கின் புகைப்படம் மட்டுமே போதுமானது என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆர்சி விபரங்கள்
ஆர்சி விபரங்கள் தானாபா பெறும் வசதி
பயனர் தனது வாகன எண், சேஸ் எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளிடும்போது, வாகன் தளத்திலிருந்து ஆர்சி விவரங்கள் தானாகவே பெறப்படும் வசதியும் விரைவில் செயல்படுத்தப்படும். ஒரு மொபைல் எண்ணில் பல வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால், பயனர் விரும்பும் வாகனத்திற்கு KYV செயல்முறையைத் தேர்வு செய்யலாம். வாடிக்கையாளர் சேவையைத் தொடர்வதை உறுதிசெய்ய, முறைகேடு அல்லது தவறான டேக் போன்ற புகார்கள் வராதவரை, KYV கொள்கைக்கு முன் வழங்கப்பட்ட ஃபாஸ்டேக்குகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், ஆவணங்களைப் பதிவேற்றுவதில் சிக்கல்கள் இருந்தால், வங்கிகள் உடனடியாக வாடிக்கையாளரைத் தொடர்புகொண்டு KYV செயல்முறையை முடிக்க உதவ வேண்டும். KYV தொடர்பான சிக்கல்களுக்கு வாடிக்கையாளர்கள் தேசிய நெடுஞ்சாலை உதவி எண்ணான 1033 ஐத் தொடர்புகொள்ளலாம்.