சென்னையில் கட்டமைக்கப்படவிருக்கும் புதிய F4 ஸ்ட்ரீட் சர்க்யூட்
F4 ஸ்ட்ரீட் ரேசிங் பந்தையங்களை நடத்து வகையில் புதிய ஸ்ட்ரீட் ரேசிங் சர்க்யூட் ஒன்றைப் பெறவிருக்கிறது சென்னை. ஆம், கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் ஏற்கனவே இரண்டு ரேசிங் ட்ராக்குகள் இருக்கும் நிலையில், சென்னையில் புதிய ரேசிங் ட்ராக் ஒன்றும் அமைக்கப்படவிருக்கிறது. சென்னையின் தீவுத்திடல் மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் 3.5 கிமீ நீளத்தில் இந்தப் புதிய ஸ்ட்ரீட் சர்க்யூட்டானது அமைக்கப்படவிருக்கிறது. தீவுத்திடல், விக்டோரியா போர் நினைவகம் மற்றும் நேப்பியர் பாலம் வரை நீளும் இந்த ஸ்ட்ரீட் சர்க்யூட்டின் பிட் மற்றும் பேடாக் கட்டமைப்பானது தீவுத் திடலிலேயே கட்டமைக்கப்படவிருக்கிறது. இந்தத் திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை Racing Promotions Private Limited (RPPL) நிறுவனத்துடன் கையெழுத்திட்டிருக்கிறார் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னையின் புதிய ஸ்ட்ரீட் சர்க்யூட் ரேசிங் ட்ராக்:
இரவு நேர பந்தையங்களை நடத்தும் வகையில் இந்த புதிய ரேஸ் ட்ராக்கை வடிவமைக்கவிருக்கின்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு, இந்தத் திட்டத்தில் ரூ.42 கோடி முதலீடு செய்யவிருக்கும் நிலையில், RPPL நிறுவனம் சுமார் ரூ.200 கோடி முதலீடு செய்யவிருக்கிறது. ஹைதராபாத் ஸ்ட்ரீட் சர்க்யூட், நானோலி ஸ்பீடுவே மற்றும் யாஸ் மரீனா சர்க்யூட் ஆகியவற்றின் வடிவமைப்பில் ஈடுபட்ட ட்ரைவன் இன்டர்நேஷனலே, சென்னையின் புதிய ஸ்ட்ரீட் சர்க்யூட்டையும் வடிவமைக்கவிருக்கிறது. இந்த ஆண்டுத் தொடக்கத்தில் ஃபார்முலா E போட்டி நடைபெற்ற ஹைதராபாத் ஸ்ட்ரீட் சர்க்யூட்டின் கட்டமைப்புக்குப் பின்னணியிலும் RPPL நிறுவனமே இருக்கிறது. இரண்டு மாதங்களில் இந்த ட்ராக்கின் கட்டுமானத்தை முடித்து, வரும் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிதகளில் F4 இந்தியா பந்தையத்தை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.