ஏப்ரல் 22: இந்தியாவில் டெஸ்லாவின் தொழில் திட்டங்களை பற்றி அறிவிக்கிறார் எலான் மஸ்க்
டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், அந்நிறுவனம் இந்தியாவில் நுழைவதை பற்றிய திட்டங்கள் குறித்து, ஏப்ரல் 22 அன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் பின்னர் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பு ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டு தளத்தைக் குறிப்பிடாமல், இந்திய சந்தைக்கான டெஸ்லாவின் திட்டங்களை விரிவுபடுத்தும் என்று அந்த அதிகாரி கூறினார். மஸ்க் தனது இந்தியா வருகை பற்றியும், மோடியை சந்திப்பது குறித்தும் ஏற்கனவே, ஏப்ரல் 10 அன்று X-இல் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்கள் இருவரும் நியூயார்க்கில் சந்தித்த பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு இதுவாகும்.
இந்திய அரசு மின் வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை குறைப்பு
முன்னதாக, இந்தியாவில் தொழிற்சாலையை அமைப்பது குறித்து பரிசீலிக்கும் போது, மின்சார வாகனங்கள் (EVகள்) மீதான இறக்குமதி வரிகளை குறைக்க, டெஸ்லா பல மாதங்களாக இந்திய அரசாங்கத்தை வற்புறுத்தி வந்தது. அதன் தொடர்ச்சியாக, இந்திய அரசாங்கம் சில மின்சார வாகன மாடல்களின் மீதான இறக்குமதி வரிகளை 100% முதல் 15% வரை குறைக்கும் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வரிக் குறைப்பினால், டெஸ்லா குறைந்தபட்சம் $500 மில்லியன் முதலீடு செய்து இந்தியாவில் ஒரு தொழிற்சாலையை நிறுவவுள்ளது. இந்தியாவில் மலிவு விலையில் EV களுக்கான டெஸ்லாவின் உற்பத்தித் திட்டங்கள் டெஸ்லா, ₹20-25 லட்சம் விலையுள்ள மலிவு விலை EV-க்கான உற்பத்தித் தளமாக இந்தியாவைப் பயன்படுத்த மஸ்க் விரும்புவதாக பெயர் வெளியிடாத அதிகாரி தெரிவித்தார்.