இந்தியாவில் வெளியானது புதிய மினி 'கன்ட்ரிமேன் ஷேடோ எடிஷன்' சொகுசு கார்
இந்தியாவில் புதிய 'கன்ட்ரிமேன் ஷேடோ எடிஷன்' மாடல் சொகுசு காரை வெளியிட்டிருக்கிறது மினி. 'கன்ட்ரிமேன் கூப்பர் S JCW' மாடலை அடிப்படையாகக் கொண்டு இந்த மாடலை வடிவமைத்திருக்கிறது மினி. இந்த ஷேடோ எடிஷன் மாடலை சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ தொழிற்சாலையிலேயே உற்பத்தி செய்யவிருக்கிறது மினி. ஆனால், வெறும் 24 கார்கள் மட்டுமே. இந்த 24 கார்களில் ஒரு கார் வேண்டுமென்றால், மினியின் அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தில் பிரத்தியேகமாக பதிவு செய்ய வேண்டும். இந்த கன்ட்ரிமேன் ஷேடோ எடிஷன் மாடலில், ஷேடோ எடிஷன் பானெட் ஸ்கூப் டீகல், முன்பக்க ஃபெண்டர் டீகல் மற்றும் ரூஃபில் ஷேடோ எடிஷன் ஸ்டிக்கர்களை வழங்கியிருக்கிறது மினி.
மினி கன்ட்ரிமேன் ஷேடோ எடிஷன்: வசதிகள்
பனோரமிக் சன்ரூஃப், பல்வேறு வசதிகளைக் கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்பிளே, எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட்மெண்டைக் கொண்ட டிரைவர் மற்றும் முன்பக்க பயணிகள் இருக்கை மற்றும் ஹார்மன் கார்டன் ஹை-பை சவுண்டு சிஸ்டத்தைக் கொண்டிருக்கிறது புதிய கன்ட்ரிமேன் ஷேடோ எடிஷன். பாதுகாப்பிற்காக 3 பாய்ண்ட் சீட்பெல்ட்கள், பிரேக் அசிஸ்ட், கிராஷ் சென்சார், டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்டரோல், முன்பக்க மற்றும் பின்பக்க பயணிகள் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் ரன்-பிளாட் இன்டிகேட்டர் ஆகிய வசதிகளை ஸ்டாண்டர்டாகவே வழங்குகிறது மினி. டிரைவர் பயன்பாட்டிற்காக க்ரூஸ் கண்ட்ரோல், பார்க் டிஸ்டன்ஸ் கண்டரோல் மற்றும் ரியர் வ்யூ கேமரா ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
மினி கன்ட்ரிமேன் ஷேடோ எடிஷன்: இன்ஜின் மற்றும் விலை
இந்தப் புதிய லிமிடட் எடிஷன் மினியில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினானது மினி ட்வின் பவர் டர்போ தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கிறது. கன்ட்ரிமேன் ஷேடோ எடிஷனின் இந்த இன்ஜினானது அதிபட்சமாக 178hp பவர் மற்றும் 280Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. 100 கிமீ வேகத்தை 7.5 நொடிகளில் எட்டிப் பிடிக்கும் இந்த காரானது, அதிகபட்சமாக 225 கிமீ வேகம் வரை செல்கிறது. 7 ஸ்பீடு டபுள் கிளட்ச் ஸ்டெப்ட்ரானிக் ஸ்போர்ட் கியர்பாக்ஸைக் கொண்ட இந்தப் புதிய கன்ட்ரிமேன் ஷேடோ எடிஷனை இந்தியாவில் ரூ.49 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது மினி.