இந்தியாவில் தங்களது புதிய 'காமெட் EV'-யை அறிமுகப்படுத்தியது எம்ஜி மோட்டார்!
பிரிட்டனைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான எம்ஜி மோட்டார் நிறுவனம், இந்தியாவில் தங்களது புதிய எலக்ட்ரிக் காரான காமெட் EV-யை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே தென்கிழக்கு ஆசியாவின் சில நாடுகளில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய எலெக்ட்ரிக் காரை நகர பயனர்களை மனதில் வைத்தே உருவாக்கியிருக்கிறது எம்ஜி மோட்டார்ஸ். குட்டியாக டிராஃபிக்கில் ஓட்டுதற்கு எளிதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது காமெட். காரின் உள்ளே நுழைவதற்கு இரண்டு பெரிய கதவுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நான்கு பேர் அமரும் வகையில் இருக்கும் இந்த காமெட் EV-யை இந்தியாவில் சிட்ரன் eC3 மற்றும் டாடா டியாகோ EV ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக களமிறக்குகிறது எம்ஜி மோட்டார்.
விலை மற்றும் பிற வசதிகள்:
காரின் உள்ளே டேஷ்போர்டில் இரண்டு 10.25 இன்ச் ஸ்கிரீன் செட்அப் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டராகவும் மற்றொன்று டச்ஸ்கிரீன் இன்ஃபோடெய்ன்மென்ட் பேனலாகவும் பயன்படுகிறது. 41.4hp பவர் மற்றும் 110Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரைப் பெற்றிருக்கிறது காமெட். இதனுடன் 17.3kWh பேட்டரியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 230 கிமீ வரை பயணம் செய்ய முடியும் எனத் தெரிவித்திருக்கிறது எம்ஜி. பயணிகளின் பாதுகாப்பிற்காக இரண்டு ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் இந்த எம்ஜி எப்போது கிடைக்கும் மற்றும் இதன் விலை என்ன என்பது குறித்த தகவல்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், இந்த புதிய எலெக்ட்ரிக் காரானது ரூ.10 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.