இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் 7 புதிய கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் எம்ஜி மோட்டார்
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் 7 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம். இந்தத் தகவலை, சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்ற டீலர்கள் சந்திப்பில் உறுதி செய்திருக்கிறது எம்ஜி மோட்டார் நிறுவனம். மேலும், அடுத்து வெளியாகவிருக்கும் கார்கள் குறித்த சில அறிமுகங்களையும் டீலர்கள் சந்திப்பில் வழங்கியிருக்கிறது எம்ஜி மோட்டார். இந்தியாவில் முழுமையான புதிய எரிபொருள் கார்கள் எதையும் அறிமுகப்படுத்தும் திட்டம் எம்ஜி மோட்டார் நிறுவனத்திடம் இல்லை. மாறாக, எலெக்ட்ரிக் கார்கள் அல்லது பிளக்-இன் ஹைபிரிட் கார்களையே இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம்.
இந்தியாவில் எம்ஜி மோட்டாரின் திட்டம்:
இந்தியாவில் டொயோட்டா பார்ச்சூனர் மாடலுக்கு போட்டியாக விற்பனை செய்யப்பட்ட வரும் தங்களுடைய கிளாஸ்டர் மாடலின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் ஒன்றை தற்போது சோதனை செய்து வருகிறது எம்ஜி மோட்டார். இந்த காரை 2024-ல் இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023 ஜனவரியில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில், உலகளாவிய வெளியீட்டை முன்வைத்து உருவாக்கப்பட்டு வரும் சில எலெக்ட்ரிக் கான்செப்ட் கார்களைக் காட்சிப்படுத்தியிருந்தது எம்ஜி மோட்டார். அந்த கார்களில் சில மாடல்கள் இந்தியாவிலும் வெளியிடப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எம்ஜி காமெட் உருவான அதே பிளாட்ஃபார்மில் புதிய காம்பேக்ட் எஸ்யூவி ஒன்றையும் உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம்.