மெர்சிடீஸ்-பென்ஸ் GLC எலக்ட்ரிக் SUV இந்தியாவில் அறிமுகம்: விலை ₹78.5 லட்சம்
செய்தி முன்னோட்டம்
ஜெர்மனியின் முன்னணி ஆடம்பர வாகன உற்பத்தியாளரான மெர்சிடீஸ்-பென்ஸ், இந்தியாவில் தனது புதிய GLC எலக்ட்ரிக் SUV காரை ₹78.5 லட்சம் ஆரம்ப விலையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு அருகிலுள்ள சாகன் உற்பத்தி ஆலையில் உள்ளூர் முறையில் பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு தயாரிக்கப்படும் இக்கார், நடப்பு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது. தொடக்கத்தில் இக்காரின் 'GLC 400 4MATIC' மாடல் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும்.
பேட்டரி
பேட்டரி திறன் & எஞ்சின் செயல்பாடு
94kWh NMC பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் கார், முழுமையாகச் சார்ஜ் செய்தால் 711 - 715 கி.மீ வரை பயணிக்கக்கூடியது.
டூயல்-மோட்டார் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம்(AWD) மூலம் 489hp ஆற்றலையும், 800Nm டார்க்கையும் வெளிப்படுத்தும்.
வெறும் 4.3 வினாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 100 கி.மீ வேகத்தை எட்டும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 210 கி.மீ ஆகும். 800V அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
முன் பகுதியில் 942 தனித்துவமான லைட்டிங் கூறுகள் கொண்ட கிரில் மற்றும் முப்பரிமாண 'தீரி-பாயிண்டட் ஸ்டார்' லோகோ அமைக்கப்பட்டுள்ளது.
மெர்சிடீஸ்-பென்ஸின் முத்திரை பெற்ற DRL எல்இடி ஹெட்லேம்ப்கள், 20 இன்ச் ஏரோடைனமிக் அலாய் வீல்கள், ஸ்லோப்பிங் ரூஃப்லைன் மற்றும் ஃபளஷ் கதவு பிடிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
வசதிகள்
சொகுசு உட்புற வசதிகள்
டேஷ்போர்டு முழுவதும் பரவியுள்ள 39.1 இன்ச் (99.3 செ.மீ) பிரம்மாண்ட ஹைப்பர்ஸ்கிரீன் இதில் உள்ளது.
இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சென்ட்ரல் டச்ஸ்கிரீன் மற்றும் முன்பக்கப் பயணி திரை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுள் AI ஆதரவு கொண்ட 4-வது தலைமுறை MBUX அமைப்பும், வெளிப்படைத் தன்மையை மாற்றியமைக்கக்கூடிய 'SKY CONTROL' பனோரமிக் கிளாஸ் ரூஃப் வசதியும் உள்ளது.
570 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ஸ்பேஸை பின்பக்க இருக்கைகளை மடக்குவதன் மூலம் 1,740 லிட்டராக உயர்த்திக் கொள்ள முடியும்.
பாதுகாப்பு
பாதுகாப்பு அமைப்புகள்
மெர்சிடீஸ் காரின் MB.DRIVE லெவல்-2 ஓட்டுநர் உதவித் தொழில்நுட்பம் இதில் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக 10 கேமராக்கள், 5 ரேடார் சென்சார்கள் மற்றும் 12 அல்ட்ராசோனிக் சென்சார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் 9 ஏர்பேக்குகள், அக்யூரேட் பார்க்கிங் அசிஸ்ட் மற்றும் ஆடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.
சந்தையில் பிஎம்டபிள்யூ iX3 மற்றும் ஆடி Q8 e-tron போன்ற சொகுசு எலக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக இந்த மெர்சிடீஸ்-பென்ஸ் GLC எலக்ட்ரிக் களம் இறங்கியுள்ளது.