ஆகஸ்ட்-9ல் வெளியாகவிருக்கும் இரண்டாம் தலைமுறை GLC எஸ்யூவியின் முன்பதிவை தொடங்கியது மெர்சிடீஸ் பென்ஸ்
இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களுடைய GLC எஸ்யூவியின் அப்டேட் செய்யப்பட்ட இரண்டாம் தலைமுறை மாடலை வரும் ஆகஸ்ட் 9-ல் வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது மெர்சிடீஸ்-பென்ஸ். இந்த புதிய மாடலின் முன்பதிவையும் அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருக்கிறது மெர்சிடீஸ். ரூ.1.5 லட்சம் கொடுத்து புதிய GLC-யை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய GLC வெளியாகவிருப்பதைத் தொடர்ந்து, முதல் தலைமுறை GLC மாடலை தங்கள் வலைத்தளப் பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறது மெர்சிடீஸ். கடந்த ஆண்டே சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடலை, தற்போது தான் இந்தியாவில் அறிமுகம் செய்யவிருக்கிறது அந்நிறுவனம். ஆகஸ்ட் 9-ல் வெளியிடப்படும் இந்தப் புதிய மாடலின் டெலிவரியை ஆகஸ்ட் இறுதியில் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ்.
மெர்சிடீஸ் பென்ஸ் GLC:
இந்தியாவில் 2.0-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட GLC 300 பெட்ரோல் வேரியன்டையும், 2.0-லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட GLC 220d டீசல் வேரியன்டையும் வெளியிடவிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். இரண்டு வேரியன்ட்களிலும் 4மேடிக் ஆஃப்ரோடு டெக் மற்றும் 48V இன்டகிரேட்டட் மோட்டாரைக் கொடுக்கவிருக்கிறது அந்நிறுவனம். இந்த மோட்டாரானது 23hp கூடுதல் பவரை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டது. மெர்சிடீஸின் சி-கிளாஸ் செடானின் டிசனைப் பிரதிபலிக்கிறது இந்த GLC-யின் டிசைன். 12.3-இன்ச் இன்ஸ்ட்ரூமண்ட் கிளஸ்டர் மற்றும் 11.9-இன்ச் போர்ட்ரெய்ட் இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்படவிருக்கிறது. இந்தியாவில் பிஎம்டபிள்யூ X3, ஆடி Q5, வால்வோ XC60 மற்றும் லெக்சஸ் NX ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக ரூ.75 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தப் புதிய GLC வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.