இந்தியாவில் வெளியானது புதிய மெர்சிடீஸ் AMG G 63 கிராண்டு எடிஷன்
இந்தியாவில் தாங்கள் ஏற்கனவே விற்பனை செய்து வரும் AMG G 63 மாடலின் கிராண்டு எடிஷனை தற்போது வெளியிட்டிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். மொத்தமாக 1000 AMG G 63 கிராண்டு எடிஷன் கார்களையே தயாரித்து விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். அதிலும், இந்தியாவிற்கு 25 கார்களை மட்டுமே ஒதுக்கியிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். இந்த கிராண்டு எடிஷனை வாங்குவதற்கு மற்றொரு விதிமுறையையும் விதித்திருக்கிறது அந்நிறுவனம். முன்னரே, மெர்சிடீஸ் மேபாக், மெர்சிடீஸ் AMG அல்லது மெர்சிடீஸ் S கிளாஸை வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்தப் புதிய AMG G 63 கிராண்டு எடிஷன் மாடலை வாங்க முடியும் என அறிவித்திருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம்.
மெர்சிடீஸ் பென்ஸ் AMG G 63 கிராண்டு எடிஷன்: மாற்றங்கள் மற்றும் விலை
இந்த கிராண்டு எடிஷன் மாடலின் வெளிப்புறமும் உட்புறமும், கருப்பு மற்றும் தங்க நிறத்தாலேயே செதுக்கியிருக்கிறது மெர்சிடீஸ். சீட்கள் மற்றும் சீட்டில் உள்ள தையல்கள் முதற்கொண்டு இந்த மாற்றம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இன்ஜினில் எந்த மாற்றமும் இன்றி, அதே 577hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 4.0 லிட்டர் V8 இன்ஜினையே பெற்றிருக்கிறது AMG G 63 கிராண்டு எடிஷன். AMG G 63 மாடலை ரூ.2.44 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் நிலையில், இந்த கிராண்டு எடிஷன் மாடலை ரூ.4 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். 2024ம் ஆண்டு முதல் காலாண்டில் இந்தப் புதிய கிராண்டு எடிஷன் மாடலின் டெலிவரியை துவக்கத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.