அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று எரிபொருள் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் மாருதி சுஸூகி
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுஸூகி அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று புதிய மற்றும் அப்டேட் செய்யப்பட்ட எரிபொருள் கார்களை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது. 2025ம் ஆண்டு தங்களுடைய முதல் எலெக்ட்ரிக் காராக eVX மாடலை வெளியிட மாருதி இலக்கு நிர்ணயித்திருக்கும் நிலையில், அதற்கு முன்னதாகவே இந்த மூன்று எரிபொருள் கார்களையும் வெளியிட்டுவிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஸ்விப்ட் மற்ரும் டிசையர் மாடல்களின் அப்டேட்டட் வெர்ஷன்களையும், புதிய 7 சீட்டர் எஸ்யூவி மாடல் ஒன்றையும் அந்நிறுவனம் வெளியடவிருப்பதாகக் கூறப்படுகிறது.
மாருதியின் புதிய எரிபொருள் கார்கள்:
மூன்று சிலிண்டர்கள் கொண்ட புதிய 1.2-லிட்டர் Z12E இன்ஜினைக் கொண்ட ஸ்விப்ட் மாடலை அடுத்த ஆண்டு மாருதி நிறுவனம் வெளியிடலாம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Z12E இன்ஜினானது நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட இன்ஜினாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ADAS பாதுகாப்பு வசதிகள் மற்றும் ஹைபிரிட் பவர்ட்ரெயினைக் கொண்டு மேம்படுத்தப்பட்ட மாடலாக அப்டேட் செய்யப்பட்ட டிசையர் மாடலை, புதிய ஸ்விப்டுடன் சேர்த்தே வெளியிடத் திட்டமிட்டு வருகிறது மாருதி. மூன்றாவதாக, டொயோட்டா உருவாக்கி வரும் கொரோல்லா கிராஸை அடிப்படையாகக் கொண்ட 7 சீட்டர் எஸ்யூவை அடிப்படையாகக் கொண்ட புதிய எஸ்யூவியை மாருதி வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையெனில், தங்களுடைய கிராண்டு விட்டாராவின் மூன்று வரிசை சீட்கள் கொண்ட மாடலாகவும் மாருதியின் புதிய எஸ்யூவி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.