மாருதியின் புதிய எம்பிவி.. ஜூலை இறுதியில் வெளியீடு.. என்ன ஸ்பெஷல்?
டொயோட்டாவுடன் சேர்ந்து புதிய எம்பிவி ஒன்றை மாருதி சுஸூகி உருவாக்கி வருகிறது. அதனை வரும் ஜூலை மாத இறுதியில் இந்தியாவில் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். இன்னோவை ஹைகிராஸைப் போலவே, ஆனால் புதிய டிசைனுடன் இந்த எம்பிவி உருவாக்கப்பட்டு வருகிறது. மாருதி சுஸூகியின் தயாரிப்புக்களேயே மறுசீரமைப்பு செய்து வேறு பெயர்களில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இதுவரை விற்பனை செய்து வந்திருக்கிறது டொயோட்டா. முதல் முறையாக டொயோட்டா உருவாக்கி வரும் இந்த எம்பிவி மாடலை மறுசீரமைப்பு செய்து வேறு பெயரில் தங்களது நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யவிருக்கிறது மாருதி சுஸூகி. டொயோட்டாவின் பிடாடி தொழிற்சாலையில் இந்த புதிய மாடலானது உற்பத்தி செய்யப்பட்டு மாருதிக்கு விநியோகம் செய்யப்படவிருக்கிறது.
மாருதியின் புதிய எம்பிவி:
டொயோட்டாவின் TNGA-C கட்டுமானத்திலேயே இந்த புதிய எம்பிவி உருவாக்கப்படவிருக்கிறது. மேலும், இன்னோவா ஹைகிராஸில் பயன்படுத்தப்பட்ட பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஹைபிரிட் இன்ஜின்களையே இந்த புதிய எம்பிவியிலும் பயன்படுத்தவிருக்கிறது டொயோட்டா. இன்னோவாவின் இன்ஜினைக் கொண்டிருந்தாலும், டிசைனைப் பொருத்தவரை மாருதியின் கிராண்டு விட்டாரா டிசைனை இந்த புதிய எம்பிவியின் டிசைன் ஒத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த புதிய எம்பிவி தான் மாருதியின் லைன்அப்பிலேயே மிக விலையுயர்ந்த மாடலாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இன்னோவா ஹைகிராஸின் அதீத ஆர்டர்கள் காரணமாக அதன் புக்கிங்குகளை நிறுத்தி வைத்திருக்கிறது டொயோட்டா. இந்நிலையில், மாருதிக்கு இந்த புதிய மாடலை எப்படி விநியோகிக்கப் போகிறது என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.