இந்தியாவில் 5.4 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் மாருதி சுஸூகி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுஸூகி 2031ம் ஆண்டிற்குள் தங்களுடைய தயாரிப்பு அளவை ஆண்டிற்கு 40 லட்சம் கார்களாக உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறது.
தற்போது ஆண்டுக்கு 20 லட்சம் கார்களைத் தயாரிக்கும் திறனைக் கொண்டிருக்கிறது மாருதி சுஸூகி. மேற்கூறிய வகையில் 2031ம் ஆண்டு அந்த இலக்கை எட்ட, 5.4 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஹரியானாவில், ஆண்டுக்கு ஒரு லட்சம் கார்களைத் தயாரிக்கும் திறனுடன் கூடிய புதிய தொழிற்சாலை ஒன்றை அமைத்து வருகிறது மாருதி சுஸூகி.
இதற்கிடையே 2024-25ம் நிதியாண்டில், தங்களுடைய முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது மாருதி சுஸூகி.
மாருதி சுஸூகி
இந்தியாவில் மாருதி சுஸூகியின் திட்டம்:
2030-31ம் நிதியாண்டிற்குள் இந்தியாவில் 6 புதிய எலெக்ட்ரிக் கார்களை வெளியிடும் திட்டத்தையும் தன்வசம் வைத்திருக்கிறது மாருதி. இந்த எலெக்ட்ரிக் கார்களை குஜராத்தில், தங்களுடைய தாய் நிறுவனமான சுஸூகி மோட்டார்ஸிடமிருந்து வாங்கும் தொழிற்சாலையில் கட்டமைக்கத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
மேலும், இந்தியாவில் தங்களுடைய வருவாயைப் பெருக்க எஸ்யூவி கார்களை உருவாக்கி வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்தவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.
தற்போது இந்திய பங்குச்சந்தைகளில் ரூ.9,712 விலையில் வர்த்தகமாக வருகின்றன மாருதி சுஸூகி நிறுவனப் பங்குகள். மேலும், ரூ.5 முகமதிப்பைக் கொண்டிருக்கிறது மாருதி சுஸூகி பங்கு.
இந்நிலையில், மாருதி சுஸூகியின் பங்கைப் பிரிக்க முதலீட்டாளர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அது குறித்து விரைவில் விவாதித்து அந்நிறுவனம் முடிவெடுக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.