கியர் பாக்சில் குறைபாடு; ஆல்டோ கே10 மாடல் கார்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுசுகி அறிவிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, ஸ்டீயரிங் கியர் பாக்ஸில் உள்ள குறைபாடு காரணமாக ஆல்டோ கே10 காரின் 2,555 மாடல்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் 2,555 ஆல்டோ கே10 வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. அதில் ஸ்டீயரிங் கியர் பாக்ஸ் அசெம்பிளி பகுதியில் குறைபாடு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த குறைபாடு வாகனத்தை இயக்கும் திறனை பாதிக்கலாம் என்றும், குறைபாடுள்ள பகுதியை மாற்றும் வரை வாகனத்தை ஓட்ட வேண்டாம் என்றும் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் மாருதி சுசுகியின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மூலம் தொடர்புகொள்ளப்பட்டு, இலவசமாக சரிசெய்து தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022இல் ஆல்டோ கே10 மாடலை அறிமுகம் செய்த மாருதி சுசுகி நிறுவனம்
மாருதி சுசுகி நிறுவனம் ஆல்டோ கே10 இன் புதிய மாடலை ஆகஸ்ட் 18, 2022 அன்று #IndiaChalPadi என்ற கோஷத்துடன் அறிமுகப்படுத்தியது. முன்பு இருந்த ஹேட்ச்பேக் மாடலை மறுவடிவமைப்பு செய்து, ஆல்டோ கே10 மாடலில் புதிய அம்சங்களைச் சேர்த்தது. 2023-24 நிதியாண்டில் 49,990 மினி கார் மாடல்களை மாருதி சுசுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. மினி கார் மாடல்களில் ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ ஆகியவை உள்ளன. முன்னதாக. மாருதி சுசுகி, ஃபியூயல் பம்ப் மோட்டாரில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக, 2019 ஜூலை 30 முதல் நவம்பர் 1, 2019 வரை தயாரிக்கப்பட்ட பலேனோவின் 11,851 கார்களையும், 4,190 வேகன்ஆர் கார்களையும் திரும்பப் பெற்றிருந்த நிலையில், தற்போது ஆல்டோ காரிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.