இந்தியாவில் வெளியானது மாருதியின் ஃப்ளாக்ஷிப் மாடலான 'இன்விக்டோ'
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தங்களுடைய புதிய ஃப்ளாக்ஷிப் மாடலான இன்விக்டோ எம்பிவியை இன்று வெளியிட்டிருக்கிறது, மாருதி சுஸூகி. கடந்த ஆண்டு வெளியான டொயோட்டா இன்னோவா ஹைகிராஸின் ரீபேட்ஜ்டு வெர்ஷனாகவே இந்த இன்விக்டோவை வெளியிட்டிருக்கிறது மாருதி நிறுவனம்.
ஸெட்டா+ மற்றும் ஆல்ஃபா+ என இரண்டு வேரியன்ட்களாக, 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் என இரண்டு சீட்டிங் தேர்வுகளுடன் வெளியாகியிருக்கிறது இன்விக்டோ.
இந்தியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்படவிருக்கும் மாருதி காராக வெளியாகியிருக்கும் இந்த இன்விக்டோவின் அனைத்து வேரியன்ட்களிலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் வேரியன்ட் இல்லை.
டொயோட்டாவின் பிடாடி தொழிற்சாலையில் தயாரிக்கப்படவிருக்கும் இந்த இன்விக்டோவானது, கிராண்டு விட்டாரா மற்றும் இன்னோவா ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக, மாருதியின் நெக்ஸா, ஷோரூம்களின் மூலம் விற்பனை செய்யப்படவிருக்கிறது.
மாருதி சுஸூகி
மாருதி சுஸூகி இன்விக்டோ: இன்ஜின் மற்றும் விலை
ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸூடன் மட்டுமல்லாமல், ஹைபிரிட் மாடலாகவும் மட்டுமே இந்த இன்விக்டோ விற்பனை செய்யப்படவிருக்கிறது.
இதில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட, 2.0-லிட்டர் இன்ஜினுடன் எலெக்ட்ரிக் மோட்டார் ஒன்றும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டும் சேர்ந்து 184hp பவரை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கின்றன.
மேலும், ஸ்ட்ராங் ஹைபிரிட் மாடல் என்பதால் எலெக்ட்ரிக் மோட்டாரை மட்டும் கொண்டு எலெக்ட்ரிக் மோடிலேயே கூட இந்தக் காரை இயக்க முடியும்.
இந்த காரின் அடிப்படை வேரியன்டான 7 சீட்டர் ஸெட்டா+ வேரியன்டானது, ரூ.24.79 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், மிடில் வேரியன்டான 8 சீட்டர் ஸெட்ட+ வேரியன்டானது, ரூ.24.84 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியாகியிருக்கிறது.
இன்விக்டோவின் டாப் எண்டான 7 சீட்டர் ஆல்ஃபா+ வேரியன்டானது ரூ.28.42 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவிருக்கிறது.