
சலுகைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸூகி ஜிம்னி
செய்தி முன்னோட்டம்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்திரா தார் மாடலுக்குப் போட்டியாக தங்களுடைய புதிய ஜிம்னியை கடந்த ஜூன் மாதம் களமிறக்கியது மாருதி சுஸூகி. இந்தியா முழுவதும் தங்களுடைய ப்ரீமியமான நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக இந்த ஜிம்னி மாடலை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம்.
இந்நிலையில், விழாக் காலத்தை முன்னிட்டு மாருதி சுஸூகி டீலர்கள் புதிய ஜிம்னிக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார்கள்.
புதிய ஜிம்னியை ஸெட்டா மற்றும் ஆஃல்பா என இரண்டு வேரியன்ட்களாக வெளியிட்டிருந்தது மாருதி சுஸூகி. இவற்றில் அடிப்படையான ஸெட்டா வேரியன்டை தற்போது சலுகை விலையில் விற்பனை செய்து வருகிறார்கள் மாருதி சுஸூகி டீலர்கள்.
மாருதி சுஸூகி
மாருதி சுஸூகி ஜிம்னிக்கு வழங்கப்படும் சலுகை:
மாருதி சுஸூகி ஜிம்னி ஸெட்டா வேரியன்டின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு வகை கியர்பாக்ஸ்களை கொண்ட மாடல்களுக்கும் சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
அடிப்படையாக ஸெட்டா வேரியன்டிற்கு ரூ.50,000 சலுகை வழங்கி வருகின்றனர் டீலர்கள். இத்துடன் கூடுதலாக ரூ.50,000-த்தை பரிமாற்ற சலுகையாக அல்லது லாயல்டி போனஸாக வழங்குகின்றனர்.
இந்தியாவில் மாருதி சுஸூகி ஜிம்னியின் அடிப்படை வேரியன்டான ஸெட்டா ரூ.12.74 லட்சம் முதல் ரூ.13.94 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
7.0 இன்ச் டச்ஸ்கிரீன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ஆறு ஏர்பேக்குகள் மற்றும் ESP ஆகிய வசதிகளை ஜிம்னியின் ஸெட்டா வேரியன்டில் வழங்கியிருக்கிறது மாருதி சுஸூகி.