கிராண்டு விட்டாராவில் புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை வழங்கியிருக்கும் மாருதி சுஸூகி
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் தங்களுடைய மிட்-சைஸ் எஸ்யூவியான கிராண்டு விட்டாராவில் AVAS (Acoustic Vehicle Alerting System) என்ற புதிய பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வழங்கியிருக்கிறது மாருதி சுஸூகி. கிராண்டு விட்டாராவின் ஸ்ட்ராங் ஹைபிரிட் வேரியன்ட்கள் மட்டும், இனி இந்த புதிய வசதியுடன் விற்பனை செய்யப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியுடன், கிராண்டு விட்டாராவின் விலையும் ரூ.4000 வரை அதிகரித்திருக்கிறது. மேற்கூறிய புதிய AVAS பாதுகாப்பு அம்சத்துடன் கூடிய கிராண்டு விட்டாரா மாடல்கள் ரூ.18.29 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலை முதல் ரூ.19.79 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படவிருக்கின்றன. மேலும், இந்தியாவில் AVAS வசதியைப் பெற்றிருக்கும் முதல் காராகவும் பெயர் பெற்றிருக்கிறது மாருதி சுஸூகி கிராண்டு விட்டாரா.
எதற்காக AVAS வசதியை அறிமுகப்படுத்துகிறது மாருதி?
கிராண்டு விட்டாராவில் வழங்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய வசதியானது, அந்த வாகனம் முழுமையான எலெக்ட்ரிக் மோடில் இயங்கும் போது தானாகவே இயக்கத்திற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு தொழில்நுட்பத்தைக் கொண்ட ஒரு கார், பாதசாரிகளுக்கு மிக அருகில் செல்லும் போது, உள்ளே இருக்கும் ஓட்டுநருக்கும், வெளியே சாலையில் இருப்பவர்களுக்கும் எச்சரிக்கை எழுப்பும் வகையில் ஒலியை எழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள், பெட்ரோல்/டீசல் வாகனங்களைப் போல சத்தத்தை வெளிப்படுத்தி இயங்குபவை அல்ல. எனவே, சாலைகளில் செல்பவர்கள் இயல்பாகவே தங்களுக்குப் பின்னால் எலெக்ட்ரிக் வாகனங்கள் வருவதை அறிந்து கொள்ள முடியாது. எனவே, எலெக்ட்ரிக் வாகனங்கள், பாதசாரிகளை எச்சரிக்கும் விதமாக மேற்கூறியது போன்ற பாதுகாப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என AIS 173 விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.