LOADING...
பண்டிகைக் காலச் சந்தைத் தேவையை ஈடுகட்ட செப்டம்பரில் உற்பத்தியை 26% அதிகரித்த மாருதி சுஸூகி
பண்டிகைக் கால தேவையை ஈடுகட்ட செப்டம்பரில் உற்பத்தியை 26% அதிகரித்த மாருதி சுஸூகி

பண்டிகைக் காலச் சந்தைத் தேவையை ஈடுகட்ட செப்டம்பரில் உற்பத்தியை 26% அதிகரித்த மாருதி சுஸூகி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 04, 2025
05:12 pm

செய்தி முன்னோட்டம்

மாருதி சுஸூகி இந்தியா நிறுவனம், சந்தையில் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், செப்டம்பர் மாதத்தில் வாகன உற்பத்தியை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 26% அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. விநியோகத்தை உறுதிசெய்ய, உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி பிரிவினர் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களிலும் பணிபுரிந்து வருவதாக மாருதி சுஸூகியின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் மூத்த நிர்வாக அதிகாரி பார்த்தோ பானர்ஜி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த நவராத்திரி பண்டிகையின்போது, தேவை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இருந்ததாக பார்த்தோ பானர்ஜி குறிப்பிட்டார். கடைசியாக 10 ஆண்டுகளில் தாங்கள் கண்ட நவராத்திரிகளில் இதுவே மிகச் சிறந்தது என்று அவர் கூறினார்.

விற்பனை

விற்பனை 27.5% அதிகரிப்பு

பண்டிகையின் முதல் எட்டு நாட்களில் மட்டும் மாருதி கிட்டத்தட்ட 1,65,000 வாகனங்களை விநியோகம் செய்து, சாதனை படைத்துள்ளது. செப்டம்பரில் ஒட்டுமொத்த சில்லறை விற்பனை கடந்த ஆண்டை விட 27.5% அதிகரித்துள்ளது. சமீபத்திய ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு இந்த விற்பனை உத்வேகத்திற்குக் காரணம் என்று பார்த்தோ பானர்ஜி கூறினார். பெட்ரோல், பெட்ரோல்-ஹைப்ரிட் மற்றும் சிஎன்ஜி வாகனங்களுக்கான வரி விகிதத்தை 28%இலிருந்து 18% ஆகக் குறைத்தது, கார்களை வாங்குபவர்களுக்கு மேலும் அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது. உற்பத்தி விவரங்களைப் பார்க்கும்போது, பலேனோ, ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் போன்ற காம்பாக்ட் ரக மாடல்களின் உற்பத்தி 93,301 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. மேலும், பிரெஸ்ஸா, எர்டிகா மற்றும் ஃப்ரான்க்ஸ் போன்ற பயன்பாட்டு வாகனங்களின் உற்பத்தியும் 27% வளர்ச்சி கண்டு 79,496 யூனிட்டுகளை எட்டியுள்ளது.