சிறு கார்கள் விற்பனையில் புதிய எழுச்சி; ஜிஎஸ்டி குறைப்பால் மாருதி சுஸூகிக்கு 3.5 லட்சம் முன்பதிவுகள்
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு அண்மையில் சிறு கார்களுக்கான ஜிஎஸ்டி வரியை 28% இலிருந்து 18% ஆகக் குறைத்ததைத் தொடர்ந்து, நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி இந்தியா லிமிடெட் ஒட்டுமொத்தமாக 3,50,000க்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்று ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த மொத்த முன்பதிவுகளில், சுமார் 2,50,000 முன்பதிவுகள் 18% ஜிஎஸ்டி பிரிவில் வரும் சிறு கார்களுக்காகப் பெறப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி குறைப்பு, சிறு கார்கள் பிரிவுக்குப் புத்துயிர் அளித்துள்ளதாக மாருதி சுஸூகியின் தலைவர் ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார். விலை உயர்வு குறித்துக் கவலைப்பட்டுச் சந்தையிலிருந்து விலகி இருந்த வாடிக்கையாளர்கள் இப்போது மீண்டும் திரும்பி வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த வரிச் சலுகையும், பண்டிகைக் காலச் சலுகைகளும்தான் இந்த விற்பனை ஏற்றத்திற்குக் காரணமாகும்.
சில்லறை விற்பனை
சில்லறை விற்பனையில் 30 சதவீதம் வளர்ச்சி
இதன் காரணமாக, அக்டோபர் மாதத்தில் மாருதி சுஸூகி நிறுவனம் சிறு கார்களின் விற்பனையில் மட்டும் 30% சில்லறை விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தற்போது, 18% ஜிஎஸ்டி அடுக்குகளின் கீழ் உள்ள வாகனங்கள் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 69% பங்கைக் கொண்டுள்ளன. தேவை தொடர்ந்து வலுவாக இருந்தால், ஏற்கனவே உள்ள சிறு கார் மாடல்களை மேம்படுத்தவோ அல்லது புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவோ திட்டமிட்டுள்ளதாக பார்கவா கூறியுள்ளார். மொத்த முன்பதிவுகளில் 65% கிராமப்புறங்கள் உட்பட முதல் 100 நகரங்களுக்கு வெளியிலிருந்து வந்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி சுஸூகி விக்டோரிஸ் எஸ்யுவி மாடலுக்கும் சில வாரங்கள் காத்திருப்புடன் சுமார் 33,000 முன்பதிவுகள் கிடைத்துள்ளன.