வெளியானது மாருதி சுஸூகியின் புதிய FronX எஸ்யூவி.. விலை என்ன?
தங்களுடைய புதிய எஸ்யூவியான ஃப்ராங்ஸை (FronX) இந்தியாவில் இன்று வெளியிட்டிருக்கிறது மாருதி சுஸூகி. பெலினோவின் கிராஸ் வெர்ஷனாக இந்த ஃப்ராங்க்ஸ் மாடலை வெளியிட்டிருக்கிறது மாருதி. கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் தான் முதன்முதலாக இந்த காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருந்தது அந்நிறுவனம். இந்தக் காரை இந்தியாவில் தங்களது ப்ரீமியமான நெக்ஸா ஷோரூம்களின் மூலம் விற்பனை செய்யவிருக்கிறது மாருதி. ஐந்து வேரியண்டகளாக, மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் இரண்டு கியர் ஆப்ஷன்களுடன் இந்தக் கார் வெளியாகியிருக்கிறது. சிக்மா, டெல்டா, டெல்டா+, ஸெட்டா மற்றும் ஆல்ஃபா என 5 வேரியண்ட்களாக வெளியாகியிருக்கும் இந்த ஃப்ராங்ஸின் உள்பக்கம் பெலினோவைப் போலவே இருக்கிறது.
என்னென்ன வசதிகள்?
9-இன்ச் டச்ஸ்கிரீன், ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகளை இந்த ஃப்ராங்ஸில் கொடுத்திருக்கிறது மாருதி. 90hp பவர் மற்றும் 113Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, நான்கு சிலிண்டர்கள் கொண்ட, 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும், 100hp பவர் மற்றும் 147.6Nm டார்க்கை வெளிப்படுதக்கூடிய, 3 சிலிண்டர்கள் கொண்டு 1.0 லிட்டர் டர்போபெட்ரோல் இன்ஜினும் இந்த ஃப்ராங்கஸில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AGS ஆட்டோமேட்டிக் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தொடக்க நிலை வேரியண்டிற்கு ரூ.7.46 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி, டாப் எண்டில் ரூ.13.13 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது ஃப்ராங்ஸ்.