தார் vs ஜிம்னி.. என்னென வசதிகள் ஜிம்னியில் இருக்கின்றன?
தங்களுடைய புதிய ஆஃப்-ரோடர் எஸ்யூவியான ஜிம்னியை இந்தியாவில் இன்னும் சில நாட்களில் வெளியிடவிருக்கிறது மாருதி சுஸூகி. இந்தியாவின் ஆஸ்தான ஆஃப்-ரோடராக இருக்கும் மஹிந்திராவின் தாரில் இல்லாத என்னென்ன வசதிகள் ஜிம்னியில் கொடுக்கப்பட்டிருக்கிறது? பார்க்கலாம். தாரில் ஹாலஜன் முகப்பு விளக்குகளே பயன்படுத்தப்பட்டிருக்க, எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் ஃபாக் விளக்குகளை ஜிம்னியில் அளித்திருக்கிறது மாருதி. ஒரு ஆஃப்-ரோடரில் சிறந்த அம்சமாக பார்க்கப்படும் முகப்பு விளக்கை நாம் காரில் இருந்தபடியே சுத்தம் செய்யும் வசதியை ஜிம்னியில் வழங்கியிருக்கிறது மாருதி. பொதுவாக இந்த வசதி ப்ரீமியம் கார்களில் மட்டுமே வழங்கப்படும். வாஷருடன் கூடிய ரியர் வைப்பரை ஜிம்னியில் வழங்கியிருக்கிறது மாருதி. இதுவும் ஒரு ஆஃப்-ரோடருக்கு மிகவும் தேவையான ஒரு அம்சம் தான். இந்த வசதி தாரில் இல்லை.
தாரில் இல்லாத என்னென்ன வசதிகள் ஜிம்னியில் இருக்கின்றன?
தாரில் இரண்டு ஏர்பேக்குகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கு, ஸ்டாண்டர்டாகவே ஆறு ஏர்பேக்குகளை பாதுகாப்புக்காக வழங்கியிருக்கிறது மாருதி. 200 லிட்டர் பூட்ஸ்பேஸைக் கொண்டிருக்கிறது ஜிம்னி. பின்பக்க சீட்களை மடக்கி வைத்தால், 332 லிட்டர் பூட்ஸ்பேஸைக் கொண்டிருக்கிறது ஜிம்னி. ஆனால், தங்களுடைய பூட்ஸ்பேஸ் அளவை மஹிந்திரா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவேயில்லை. நிச்சயமாக 200 லிட்டருக்கும் குறைவாகவே இருக்கும். தாரில் 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்க, ஜிம்னியில் 9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைக் கொடுத்திருக்கிறது மாருதி. தாரில் இல்லாத ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதியை ஜிம்னியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக 3-டோர் தார் மட்டுமே தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கிறது. 3-டோர் ஜிம்னி வெளிநாடுகளில் விற்பனையில் இருந்தாலும், 5-டோர் ஜிம்னியையே இந்தியாவில் மாருதி விற்பனை செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.