ரூ.30,000 வரை சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மஹிந்திரா தார்
இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் 3-டோர் தாரின் விலையை சமீபத்தில் தான் ரூ.1 லட்சம் வரை உயர்த்தியது மஹிந்திரா நிறுவனம். இந்த விலை உயர்வைத் தொடர்ந்து, தாரின் மேனுவல் கியர்பாக்ஸ், ரியர்-வீல் டிரைவ் மற்றும் டீசல் இன்ஜின் கொண்ட ஹார்டு டாப் வேரியன்டானது, முன்பை விட ரூ.55,000 அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக, தாரின் மேனுவல் கியர்பாக்ஸ், ரியர்-வீல் டிரைவ் மற்றும் டீசல் இன்ஜின் கொண்ட LX வேரியன்டின் விலை ரூ.1,05,000 வரை உயர்த்தப்பட்டது. வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் வேரியன்டாகவும் இருந்து வருகிறது இந்த LX ரியர் டிரைவ். விலை உயர்வைத் தொடர்ந்து, தாரின் 4-வீல் டிரைவ் மாடல்கள் ரூ.13.49-16.77 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
சலுகை விலையில் மஹிந்திரா தார்:
புதிய 5-டோர் தாரின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தற்போது ரூ.30,000 வரை சலுகை விலையில் தாரின் சில வேரியன்ட்கள் மட்டும் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தாரின் 4-வீல் டிரைவானது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் AX(O) மற்றும் LX ஆகிய இரண்டு வேரியன்ட்களாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாடல்களுக்கே ரூ.30,000 வரை சலுகை வழங்கப்பட்டு வருகிறது. தாரின் 4-வீல் டிரைவ் வேரியன்ட்களில், 152hp பவர் மற்றும் 300Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும், 130hp பவர் மற்றும் 300Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 2.2 லிட்டர் டீசல் இன்ஜினும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், இரண்டிலுமே 6-ஸ்பீடு மேனுல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.