LOADING...
எஸ்எம்எல் இசுசுவை கைப்பற்றுவதற்கான பங்கு வர்த்தக செயல்முறையை முடித்தது மஹிந்திரா
எஸ்எம்எல் இசுசுவை வாங்குவதற்கான செயல்முறையை முடித்தது மஹிந்திரா

எஸ்எம்எல் இசுசுவை கைப்பற்றுவதற்கான பங்கு வர்த்தக செயல்முறையை முடித்தது மஹிந்திரா

எழுதியவர் Sekar Chinnappan
Aug 03, 2025
11:13 am

செய்தி முன்னோட்டம்

மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனம் எஸ்எம்எல் இசுசு லிமிடெட் நிறுவனத்தில் கட்டுப்பாட்டுப் பங்கை வாங்கும் செயல்முறையை வெற்றிகரமாக முடித்துள்ளது. ஜப்பானின் சுமிடோமோ கார்ப்பரேஷன் மற்றும் இசுசு மோட்டார்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களிடமிருந்து எஸ்எம்எல் இசுசுவில் 58.96% பங்குகளை மஹிந்திரா வாங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், எஸ்எம்எல் நிறுவனத்தின் பொதுப் பங்குதாரர்களிடமிருந்து கூடுதலாக 26% பங்குகளை வாங்குவதற்கான கட்டாயமான திறந்த சலுகையும் அடங்கும். இந்த கையகப்படுத்துதலுக்குப் பிறகு, எஸ்எம்எல் இசுசுவின் இயக்குநர்கள் குழு மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதில் வினோத் சஹாய் செயல் தலைவராகவும், டாக்டர் வெங்கட் ஸ்ரீனிவாஸ் செயல் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேவையான அனுமதிகளைப் பெற்ற பிறகு, நிறுவனத்தின் பெயர் எஸ்எம்எல் மஹிந்திரா லிமிடெட் என மாற்றப்பட உள்ளது.

முதலீடு 

மஹிந்திராவின் முதலீடு

இந்த மூலோபாய நடவடிக்கையில் மஹிந்திரா நிறுவனம் எஸ்எம்எல் இசுசு நிறுவனத்தின் ஒரு பங்குக்கு ரூ. 650 வீதம் மொத்தம் ரூ. 555 கோடி முதலீடு செய்துள்ளது. இது 3.5 டன்னுக்கும் அதிகமான வணிக வாகன பிரிவில் மஹிந்திரா நிறுவனத்தின் இருப்பை கணிசமாக வலுப்படுத்தும் நோக்கம் கொண்டது. தற்போது இந்தப் பிரிவில் 3% சந்தைப் பங்கைக் கொண்டுள்ள மஹிந்திரா, இந்தக் கையகப்படுத்துதலின் மூலம் தனது சந்தைப் பங்கை 6% ஆக இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது. மேலும், 2031 நிதியாண்டிற்குள் 10-12% மற்றும் 2036 நிதியாண்டிற்குள் 20% அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1983 இல் நிறுவப்பட்ட எஸ்எம்எல் இசுசு, டிரக்குகள் மற்றும் பேருந்துகள் பிரிவில், குறிப்பாக ஐஎல்சிவி பேருந்துகள் பிரிவில் 16% சந்தைப் பங்கைக் கொண்ட நிறுவனமாகும்.