இந்தியாவில் வெளியாகும் லோட்டஸ் நிறுவனத்தின் இரண்டாவது கார், எமைரா!
தங்களுடைய எலெட்ரே (Eletre) எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலின் அறிமுகத்துடன் இந்தியாவில் இந்த மாதத் தொடக்கத்தில் கால் பதித்திருக்கிறது பிரிட்டனைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான லோட்டஸ் (Lotus). லோட்டஸ் நிறுவனத்தின் கடைசி எரிபொருள் காரான எமைரா மாடலையே இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எலெட்ரேவை வெளியிட்டது லோட்டஸ். தற்போது இந்தியாவில் தங்களது இரண்டாவது மாடலா, அடுத்த ஆண்டு எமைரா (Emira) மாடலை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம். காரின் உள்ளே பல்வேறு மேம்பட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், லோட்டஸ் எவிஜா (Evija) ஹைப்பர்காரின் டிசனை அடிப்படையாகக் கொண்ட டிசனைப் பெற்றிருக்கிறது எமைரா.
லோட்டஸ் எமைரா: இன்ஜின் மற்றும் வசதிகள்
இந்தியாவில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் லோட்டஸ் எமைரா மாடலானது இரண்டு வகையான இன்ஜின்கள் மற்றும் மூன்று வகையான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களைக் கொண்டு வெளியாகவிருக்கிறது. AMG-யின் 360hp பவரை வெளிப்படுத்தக்கூடிய நான்கு சிலிண்டர்களைக் கொண்ட, 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் டொயோட்டாவின் 400hp பவரை வெளிப்படுத்தக்கூடிய, 3.6 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு V6 இன்ஜின் ஆகிய இரு இன்ஜின் தேர்வுகளைக் கொண்டிருக்கிவிருக்கிறது. முதல் இன்ஜினானது 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸையும், இரண்டாவது இன்ஜினானது 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளையும் கொண்டிருக்கவிருக்கிறது. இந்த சொகுசுக் காரை இந்தியாவில் ரூ.3 கோடி விலைக்குள் லோட்டஸ் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.