இந்தியாவில் வெளியானது லம்போர்கினியின் புதிய 'உரூஸ் S'
கடந்த செப்டம்பர் மாதம் விற்பனையில் இருந்து உரூஸ் மாடலுக்கு மாற்றாக உரூஸ் S மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியது லம்போர்கினி. சொகுசு கார்கள் என்று பரவலாக அறியப்படும் பிராண்டின் மாடலை தற்போது இந்தியாவிலும் வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே உரூஸ் பெர்ஃபாமன்டே மாடல் விற்பனையில் இருக்கு, இந்த புதிய உரூஸ் S மாடலையும் அதனுடன் சேர்த்து விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது லம்போர்கினி. பெர்ஃபாமன்ஸையே முதன்மையாக வைத்து உரூஸ் பெர்ஃபாமன்டே மாடலை வெளியிட்டிருந்தது லம்போர்கினி. ஆனால், இந்த புதிய உரூஸ் S மாடலின் பயன்பாட்டை முதன்மையாக வைத்து வடிவமைத்திருக்கிறது. சொகுசான பயணத்தையும், வாடிக்கையாளர்கள் விரும்பும் கஸ்டமைசேஷனையும் இதில் செய்து கொள்ள முடியும். இந்த புதிய லம்போர்கினி உரூஸ் S, இந்தியாவில் ரூ.4.18 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது.
என்னென்ன வசதிகள்?
வெளிப்பக்கம் மற்றும் உள்பக்க வடிவமைப்பை பெர்ஃபாமண்டே மாடலிடம் இருந்து கடன் வாங்கியிருக்கிறது இந்த உரூஸ் S. இன்ஜினுமே கூட பெர்ஃபாமன்டேவில் பயன்படுத்தப்பட்ட அதே 4.0-லிட்டர் ட்வின்-டர்போசார்ஜூடு V8 இன்ஜின் தான். இந்த இன்ஜினானது 666hp பவரையும், 850Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. 8 ஸ்பீடு கியர் பாக்ஸூடன் 100 கிமீ வேகத்தை வெறும் 3.5 நொடிகளில் எட்டிப்பிடிக்கிறது உரூஸ் S. சஸ்பென்ஷன் செட்டப்பாக முந்தைய உரூஸில் பயன்படுத்தப்பட்ட அதே ஏர் சஸ்பென்ஷன் செட்டப் தான் இதிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிஎம்டபிள்யூ XM, ஆடி RSQ8, ஆஸ்டன் மார்டின் DBX 707 மற்றும் போர்ஷே கேயான் டர்போ GT ஆகிய கார்களுக்குப் போட்டியாக இந்தியாவில் இந்த உரூஸ் S-ஐ களமிறக்கியிருக்கிறது லம்போர்கினி.