லம்போர்கினியின் புதிய ரெவால்டோ ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்.. என்ன ஸ்பெஷல்?
தங்களது முதல் ப்ளக்-இன் ஹைபிரிட் காரான ரெவால்டோ மாடல் காரை கடந்த மாதம் வெளியிட்டது லம்போர்கினி. அதே காரை தற்போது நடைபெற்று வரும் ஷாங்காய் ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். இந்தக் காரில் என்ன ஸ்பெஷல்? உலகளவில் லம்போர்கினிக்கு இரண்டாவது பெரிய சந்தை சீனா. எனவே தான் ஆசியாவில் முதல்முறையாக அங்கு தங்களுடைய இந்த ப்ளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது லம்போர்கினி. இந்த ரெவால்டோவுடன், உரூஸ் பெர்ஃபாமன்டே மற்றும் ஹூராகேன் டெக்னிகா ஆகிய மாடல்களையும் காட்சிப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். ஷாங்காய் ஆட்டோ எக்ஸ்போவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த ரெவால்டோ. இந்த சூப்பர்காருக்கு ஏற்கனவே வெயிட்டிங் லிஸ்ட் இரண்டு வருடத்திற்கும் மேலே சென்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன ஸ்பெஷல்?
லம்போர்கினியின் சாதாரண காரின் இன்ஜினே மிகவும் பவர்ஃபுல்லாகத் தான் இருக்கும் இதனை ஃப்ளாக்ஷிப் கார் என்று வேறு குறிப்பிட்டிருக்கிறது லம்போர்கினி. அவெண்டடாரின் வெற்றியாளர் என்றும் கூறி இந்தக் காரை அறிமுகம் செய்திருக்கிறது லம்போர்கினி. எனவே, அதனைப் போலவே ஷார்ப்பான டிசைனைக் கொண்டிருக்கிறது. இந்த ரெவால்டோவில் 989hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 218 கிலோ எடை கொண்ட V12 இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதோடு மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்களும், 3.8kWh லித்தியம்-அயன் பேட்டரியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ரெவால்டோவின் வெளியீட்டுடன் எலெக்ட்ரிஃபிகேஷன் என்ற புதிய கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது லம்போர்கினி. இந்தக் கார் ஒரு தொடக்கம் தான். இதனைத் தொடர்ந்து, உரூஸ் ஹைபிரிட், எலெக்ட்ரிக் ஹூராகேன் ஆகிய கார் மாடல்களையும் வெளியிடும் திட்டத்தில் இருக்கிறது லம்போர்கினி.