13,000 முன்பதிவுகளைப் பெற்று புதிய சாதனை படைத்த கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்
நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பிறகு தங்களுடைய செல்டோஸ் எஸ்யூவி மாடலின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது தென் கொரியாவைச் சேர்நத கார் தயாரிப்பு நிறுவனமான கியா. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 14-ம் தேதி இந்தியாவில் இந்த புதிய மாடலுக்கான முன்பதிவைத் தொடங்கியது அந்நிறுவனம். ரூ.25,000 முன்பணம் செலுத்தி புதிய செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முன்பதிவு தொடங்கிய முதல் 24 மணி நேரத்தில் 13,424 முன்பதிவுகளைப் பெற்று புதிய சாதனை படைத்திருக்கிறது செல்டோஸ். இத்துடன் முதல் 24 மணி நேரத்தில் அதிக முன்பதிவுகளைப் பெற்ற மிட்சைஸ் எஸ்யூவி என்ற பெயரைப் பெறுகிறது செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்.
கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்:
அடுத்த சில வாரங்களில் தங்களது புதிய செல்டோஸ் ஃபேஸ்லிஃப்டின் விலையை அறிவிக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது கியா. வெளிப்புறம் சின்னச் சின்ன டிசைன் மாற்றங்கள், உட்புறம் சில கூடுதல் வசதிகள் மற்றும் புதிய இன்ஜின் தேர்வு ஒன்று என ஆல்ரவுண்டிங் அப்டேட்டை புதிய செல்டோஸ் ஃபேஸ்லிஃப்டில் கொடுத்திருக்கிறது கியா. ஏற்கனவே, 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்களை செல்டோஸ் பெற்றிருக்கிறது செல்டோஸ். கடந்த மார்ச் மாதம், செல்டோஸில் கொடுக்கப்பட்டு வந்த 1.4-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை நிறுத்தியது கியா. புதிய ஃபேஸ்லிஃப்டி அதற்கு மாற்றாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். கிரெட்டா, குஷாக் மற்றும் டைகூன் ஆகிய கார்களுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்படவிருக்கிறது செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்.