இந்தியாவில் மூன்று புதிய டர்ட் பைக் மாடல்களை வெளியிட்டது கவாஸாகி
இந்தியாவில் டர்ட் பைக்கிங் செக்மெண்டில் மூன்று புதிய பைக்குகளை வெளியிட்டிருக்கிறது கவாஸாகி. இந்திய மோட்டோகிராஸ் சந்தையில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. என்னென்ன பைக்குகளை வெளியிட்டிருக்கிறது கவாஸாகி? KLX 230R S, KX65 மற்றும் KX112 ஆகிய மூன்று பைக்குகளை தற்போது இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது கவாஸாகி. கவாஸாகி KLX 230R S: இந்தியாவில் ஏற்கனவே KLX110, KLX140G, மற்றும் KLX450R ஆகிய KLX மாடல் பைக்குகள் விற்பனையில் இருக்கினறன. அந்த லைன்-அப்பில் தற்போது புதிதாக இணைந்திருக்கிறது KLX 230R S. ஹார்டுகோர் டர்ட் ரைடர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பைக்கானது 233சிசி, 4-ஸ்ட்ரோக், ஏர்-கூல்டு இன்ஜினைப் பெற்றிருக்கிறது. இந்தியாவில் ரூ.5.21 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் தற்போது வெளியாகியிருக்கிறது.
கவாஸாகி KX112:
KX100 பைக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த KX112-வில், 2-ஸ்ட்ரோக், 112சிசி, லிக்விட்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினானது, 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. முன்பக்கம் 19-இன்ச் வீல்களையும், பின்பக்கம் 16-இன்ச் வீல்களையும் பெற்றிருக்கும் இந்த பைக்கில் இரு பக்கமும் டிஸ்க் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் ரூ.4.87 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது இந்த KX112. கவாஸாகி KX65: இந்தியாவில் தொடக்க-நிலை டர்ட் பைக்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது KX65. இந்த பைக்கும் பெயருக்கேற்ற வகையில், 2-ஸ்ட்ரோக், 64சிசி, லிக்விட்-கூல்டு இன்ஜினைப் பெற்றிருக்கிறது. ஸ்டீலால் ஆன செமி டபுள் கிரேடில் பிரேமின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த பைக்கை ரூ.3.12 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது கவாஸாகி.