எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்க சீன நிறுவனமான SAICயுடன் கைகோர்க்கும் இந்திய JSW குழுமம்
இந்தியாவைச் சேர்ந்த வணிகக் குழுமமான JSW குழுமமானது, சீனாவைச் சேர்ந்த SAIC மோட்டார் நிறுவனத்தின் கீழ் இந்தியாவில் இயங்கி வரும் எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் குறிப்பிட்ட அளவு பங்குகளைக் கையகப்படுத்தவிருக்கிறது. எம்ஜி மோட்டார் நிறுவனமானது சீனாவைச் சேர்ந்த நிறுவனத்தின் கீழ் இருப்பதால், அது சீன நிறுவனமாகக் கருதப்பட்டு இந்தியாவில் அந்நிறுவனத்தில் கூடுதல் முதலீடுகள் மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்வதில் பல்வேறு தடைகள் இருந்தது. எனவே, எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் பெருவாரியான பங்குகளை இந்திய நிறுவனமான JSW குழுமம் வாங்கவிருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியாகியிருந்தது. தற்போது அந்த ஒப்பந்தமானது இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. பங்குகள் பிரிக்கப்படும் முறை, உரிமையாளர் தொடர்பான விஷயங்கள் தற்போது திட்டமிடப்பட்டு வருகின்றன.
எம்ஜி மோட்டார் பங்குகளைப் பெறும் சஜ்ஜின் ஜின்தால்:
இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் கீழ் ரூ.5,000 கோடிகளை அந்நிறுவனத்தின் இந்திய தயாரிப்புக் கட்டமைப்பை மேம்படுத்த முதலீடு செய்யவிருக்கிறது JSW குழுமம். இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக முடியும் பட்சத்தில், முதற்கட்டமாக எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் 32-35% பங்குகளை JSW குழுமத்தின் தலைவரான சஜ்ஜின் ஜின்தாலும், 8% பங்குகளை இந்தியாவின் பிற நிதி நிறுவனங்களும், 6-7% பங்குகளை எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இந்திய டீலர்கள் மற்றும் ஊழியர்களும் கைப்பற்றவிருக்கின்றனர். 49%-தத்திற்கும் குறைவான பங்குகளையே வைத்துக் கொள்ளவிருக்கிறது எம்ஜி மோட்டாரின் தாய் நிறுவனமான சீனாவைச் SAIC மோட்டார் நிறுவனம். இதனைத் தொடர்ந்து இந்திய நிறுவனமாகவும் மாறவிருக்கிறது எம்ஜி மோட்டார்.