எம் மோட்டார் நிறுவனத்தில் முதலீடு செய்யும் JSW குழுமம்?
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தில் இந்தியாவின் JSW நிறுவனம் முதலீடு செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 2017-ம் ஆண்டு செப்டம்பரில் குஜராத்தின் ஹலோலில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸின் தொழிற்சாலையை வாங்கி இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் நுழைந்தது எம்ஜி மோட்டார் நிறுவனம். ஏப்ரல் 2022 வரை இந்தியாவில் 48,000 கார்களை விற்பனை செய்திருக்கிறது அந்நிறுவனம். தற்போது இந்தியாவில் ஆஸ்டர், கிளாஸ்டர், ஹெக்டர் 5-சீட்டர், ஹெக்டர் பிளஸ் மற்றும் ZS EV ஆகிய 5 மாடல்களை விற்பனை செய்து வருகிறது. நாளை புதிய காமெட் மாடலையும் வெளியிடவிருக்கிறது. குஜராத்தில் உள்ள ஹலோல் தொழிற்சாலையுடன், மேலும் ஒரு தொழிற்சாலையை நிறுவ அந்நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் திட்டமிட்டு வருகிறது.
புதிய முதலீடு:
அந்நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே ரூ.5,000 கோடி முதலீடு செய்திருக்கும் நிலையில், மேலும் ரூ.5,000-யை முதலீடு செய்ய திட்டமிட்டு வருகிறது. ஆனால், இந்தியா மற்றும் சீனா இடையே நிகழ்ந்து அரசியல் பிரச்சினைகள் காரணமாக, இந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான சீனாவைச் சேர்ந்த SAIC-யிடமிருந்து நேரடியாக முதலீடுகளைப் பெற சிக்கல் எழுந்தது. இதன் காரணமாக தங்கள் நிறுவனப் பங்குகளை வைத்து முதலீட்டைத் திரட்டும் வேலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறங்கியது எம்ஜி மோட்டார். தற்போது JSW குழுமத்துடன் 15% - 20% பங்குகளுக்கு இந்திய மதிப்பில் ரூ.16,000 முதல் ரூ.20,000 வரை முதலீடு திரட்ட இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.