வெறும் 85 கார்கள் மட்டுமே! இந்தியாவில் அறிமுகமானது ஜீப் மெரிடியன் 85வது அனிவர்சரி எடிஷன்! என்னென்ன சிறப்பு அம்சங்கள்?
செய்தி முன்னோட்டம்
ஜீப் நிறுவனம் உலகளவில் தனது 85 ஆண்டு கால பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், இந்தியாவில் தனது பிரபல 7-சீட்டர் எஸ்யூவியான ஜீப் மெரிடியன் 85வது அனிவர்சரி எடிஷன் சிறப்புப் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் தொடக்க விலை ₹36.05 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரத்யேகமாக இந்தியாவில் வெறும் 85 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு மாடல் விற்பனை செய்யப்படவுள்ளது.
வடிவமைப்பு
வெளிப்புற மற்றும் உட்புற பிரத்யேக வடிவமைப்பு
இந்தச் சிறப்புப் பதிப்பு காரானது மெரிடியனின் டாப்-எண்ட் ஓவர்லேண்ட் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிப்புறத்தில் 18-இன்ச் கிளாஸ் பிளாக் அலாய் வீல்கள், கதவுகள் மற்றும் பின்புறத்தில் 85வது அனிவர்சரி லோகோ பேட்ஜ்கள் இடம்பெற்றுள்ளன.
காரின் உட்புறத்தில் ஆல்-பிளாக் தீமுடன் கூடிய மாயன் கோல்ட் நிற ஃபினிஷிங், ஸ்கை லவுஞ்ச் சன்ரூஃப் லைட்டிங் மற்றும் பிரத்யேக ஆம்பியன்ட் லைட்டிங் வசதிகள் வழங்கப்பட்டு காரின் சொகுசுத் தன்மையைக் கூட்டியுள்ளன.
ஏஐ
CARA AI வாய்ஸ் அசிஸ்டண்ட் அறிமுகம்
இந்த 85வது அனிவர்சரி எடிஷன் காரில் ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனத்தின் அதிநவீன 'CARA AI' வாய்ஸ் அசிஸ்டண்ட் தொழில்நுட்பம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஓட்டுநர்கள் காரின் செயல்பாடுகள், நேவிகேஷன், வானிலை தகவல்கள் மற்றும் போன்கால்களை வாய்ஸ் கமாண்ட் மூலம் மிக எளிதாகக் கட்டுப்படுத்த முடியும்.
இத்துடன் 'AXS' ஆக்ஸஸரீஸ் பேக்கேஜ்கள் மூலம் மேட், டெக்கல்கள் மற்றும் உட்புற விளக்குகளை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ப தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.
முன்பதிவு
சக்திவாய்ந்த என்ஜின் மற்றும் முன்பதிவு விவரங்கள்
இந்தச் சிறப்புப் பதிப்பு காரில் வழக்கமான 2.0-லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இது 168 BHP ஆற்றலையும் 350 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது 9-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் 2WD மற்றும் 4WD ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
பேர்ல் வொயிட், பிரில்லியன்ட் பிளாக் உட்பட 5 நிறங்களில் கிடைக்கும் இந்த காரை ஜீப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஷோரூம்களில் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.