இந்தியாவில் கடந்த மே மாதம் அதிகரித்த பயணிகள் வாகன விற்பனை
இந்திய ஆட்டோமொபைல் துறையானது கடந்த மே மாதம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகளவிலான பயணிகள் வாகன விற்பனையை பதிவு செய்திருக்கிறது. இது குறித்த அறிக்கையை இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) தற்போது வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள தரவுகளின் படி, பயணிகள் வாகனம், இருசக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனம் உட்பட கடந்த மே மாதம் மட்டும் 21.24 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2022-ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது, கடந்த மாதம் அனைத்து பிரிவுகளிலும் வாகன விற்பனை இருமடங்கு உயர்வைச் சந்தித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் வினோத் அகர்வால்.
அதிகரித்த வாகன விற்பனை:
இதில் கடந்த மாதம் மட்டும் 3.34 லட்சம் பயணிகள் வாகனம் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு மே மாதத்தை விட 13.5% அதிகம். அதேபோல் கடந்த மாதத்தில் மட்டும் 48,732 மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இது முந்தைய ஆண்டை விட 70.4% அதிகம். இருசக்கர வாகனப் பிரிவில் கடந்த மாதம், 14.71 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 17.4% அதிகமாகும். இந்திய ஆட்டோமொபைல் சந்தையானது தற்போது ஒரு மாற்றத்தை சந்தித்து வருகிறது. மத்திய அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப பெட்ரோல்/டீசல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.