உற்பத்தியை அதிகரிக்க எலக்ட்ரிக் வாகன கொள்கையில் புதிய திருத்தங்கள்; மத்திய அரசு திட்டம்
இந்தியா தனது மின்சார வாகன கொள்கையை திருத்த உள்ளது. புதிய வசதிகளுடன் இருக்கும் தொழிற்சாலைகளில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் வாகன உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையை நீட்டிக்க உள்ளது. டெஸ்லா போன்ற உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட முந்தைய மூலோபாயத்திலிருந்து இது குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. இந்தக் கொள்கையின் கீழ், வாகன உற்பத்தியாளர்கள் குறைந்தபட்சம் 50% உள்ளூர் ஆதாரங்களுடன் எலக்ட்ரிக் வாகனங்களை உள்நாட்டில் தயாரிக்க குறைந்தபட்சம் $500 மில்லியன் முதலீடு செய்ய வேண்டும். குறைக்கப்பட்ட இறக்குமதி வரிகளால் இவர்கள் பயனடைவார்கள். ஆண்டுதோறும் 8,000 எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 100%இல் இருந்து 15% வரை குறைக்கப்படுகிறது.
அனைத்து தொழிற்சாலைகளுக்கும் ஊக்கத்தொகை
முன்னதாக புதிய ஆலைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட இந்த ஊக்கத்தொகை, தற்போதுள்ள பெட்ரோல் அல்லது ஹைப்ரிட் வாகனத் தொழிற்சாலைகளுக்குப் பொருந்தும். எனினும், எலக்ட்ரிக் வாகனங்கள் உள்ளூர் ஆதாரத் தரங்களுக்கு ஏற்ப தனித்தனி உற்பத்திக் லைன்களில் கட்டப்பட்டிருக்க வேண்டும். டொயோட்டா மற்றும் ஹூண்டாய் போன்ற வாகன உற்பத்தியாளர்கள் இந்தக் கொள்கையைப் பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், முதலீட்டு காலக்கெடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவுகளின் தகுதி மற்றும் சப்ளையர் முதலீடுகள் அல்லது சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்புகள் $500 மில்லியன் வரம்பை நோக்கிக் கணக்கிடப்படுமா என்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர். மார்ச் மாதத்திற்குள் எதிர்பார்க்கப்படும் இறுதிக் கொள்கையானது, எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு குறிப்பிட்ட வருவாய் இலக்குகளை அமைப்பது போன்ற அனைத்து கேள்விகளுக்கான பதில்களை உள்ளடக்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.