LOADING...
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம்: இந்திய வாகன உற்பத்தி நிறுவனங்கள் மீதான தாக்கம் என்ன?
வெளிநாடுகளில் முழுமையாக தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரி குறைக்கப்பட உள்ளது

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம்: இந்திய வாகன உற்பத்தி நிறுவனங்கள் மீதான தாக்கம் என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Jan 28, 2026
01:49 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தின்படி, வெளிநாடுகளில் முழுமையாக தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் கார்கள் (CBU) மீதான வரி 110%-லிருந்து 40% ஆகக் குறைக்கப்பட உள்ளது. இது மிகப்பெரிய மாற்றமாக தெரிந்தாலும், இதன் தாக்கம் மிகக் குறுகிய வட்டத்திற்குள்ளேயே இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த வரிக்குறைப்பு போர்ஷே (Porsche), லம்போர்கினி (Lamborghini) போன்ற சொகுசு கார்களுக்கும், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ (Audi & BMW) நிறுவனங்களின் பிரீமியம் மாடல்களுக்கும் மட்டுமே சாதகமாக அமையும். இந்த கார்கள் இந்தியாவில் முழுமையாக தயாரிக்கப்படாமல் இறக்குமதி செய்யப்படுவதால், இவற்றின் விலை ஓரளவுக்கு குறைய வாய்ப்புள்ளது.

பாதிப்பு

மஹிந்திரா நிறுவனத்திற்குப் பாதிப்பா?

கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) நிறுவனத்தின் ஆய்வின்படி, ஐரோப்பிய கார்களின் விலை குறைவது மஹிந்திரா (M&M) நிறுவனத்திற்கு சவாலாக அமையலாம். குறிப்பாக, சுமார் 23.2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐரோப்பிய கார்கள், மஹிந்திராவின் XUV700 மற்றும் Scorpio-N ஆகிய மாடல்களுக்கு போட்டியாக மாறும். மஹிந்திராவின் ஒட்டுமொத்த கார் விற்பனையில் 12.9% பங்குகள் இந்த விலை வரம்பிற்குள் வருகின்றன. இருப்பினும், மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபத்தில் கார் விற்பனை 30% மட்டுமே பங்களிக்கிறது. டிராக்டர்கள் மற்றும் நிதி சேவைகள் மூலம் அதிக லாபம் கிடைப்பதால், இந்த ஒப்பந்தத்தால் நிறுவனத்திற்கு ஏற்படும் பாதிப்பு 1% முதல் 4% வரை மட்டுமே இருக்கும் எனத் தெரிகிறது.

போட்டி

அதிக மார்க்கெட் கொண்ட நிறுவனங்கள்

வோக்ஸ்வேகன் (Volkswagen), ஸ்கோடா (Skoda) மற்றும் ரெனால்ட்(Renault) போன்ற நிறுவனங்கள் தங்களது கார்களை இந்தியாவிலேயே உதிரிபாகங்களைக் கொண்டு (CKD) அசெம்பிள் செய்கின்றன. இவற்றுக்கான வரி ஏற்கனவே 17% என்ற குறைந்த அளவில் இருப்பதால், சாதாரண மக்கள் வாங்கும் கார்களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. சுருக்கமாக சொன்னால், இந்த வர்த்தக ஒப்பந்தம் சொகுசு கார் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், இந்திய வாகன துறையின் ஒட்டுமொத்த லாபத்தையோ அல்லது சாதாரண கார் சந்தையையோ தற்போதைக்கு தலைகீழாக மாற்றாது.

Advertisement