புதிய க்ரெட்டா மற்றும் டூஸான் ஃபேஸ்லிப்ட் மாடல்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் ஹூண்டாய்
தங்களுடைய டூஸான் மற்றும் க்ரெட்டா ஆகிய மாடல்களின் ஃபேஸ்லிப்ட் மாடல்களை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது ஹூண்டாய். ஹூண்டாய் நிறுவனமானது தற்போது இந்தியாவில் தங்கள் ப்ரீமியம் எஸ்யூவியான டூஸானின் நான்காம் தலைமுறை மாடலை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், டூஸானின் ஃபேஸ்லிப்ட் மாடல் ஒன்றை ஆஸ்திரேலியாவில் அந்நிறுவனம் சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இன்ஜினில் எந்த மாற்றமும் இன்றி காஸ்மெடிக் மாற்றங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு இந்த டூஸான் பேஸ்லிஃப்ட் மாடலை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு சர்வதேச சந்தைகளிலும், அதனைத் தொடர்ந்து 2025-ல் இந்தியாவிலும் இந்த டூஸான் ஃபேஸ்லிப்ட் மாடலை ஹூண்டாய் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
க்ரெட்டாவின் புதிய மாடலையும் சோதனை செய்து வரும் ஹூண்டாய்:
இந்தியாவில் ஹூண்டாயின் போர்ட்ஃபோலியோவில் முக்கியமான காராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது க்ரெட்டா. எனவே, க்ரெட்டா மாடலுக்கான ரெப்ரெஷ்மெண்டாக புதிய ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது ஹூண்டாய். இந்த புதிய க்ரெட்டா ஃபேஸ்லிப்ட் மாடலானது இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்ட வந்த போது ஸ்பைஷாட்களில் சிக்கியிருக்கிறது. புதிய க்ரெட்டாவிற்கு முழுவதுமாக புதிய டிசைனைக் கொடுக்க முடிவு செய்திருக்கிறது ஹூண்டாய். சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் பாலிசேடு மாடலின் டிசைனைப் போலாவே புதிய க்ரெட்டாவின் டிசைனையும் ஹூண்டாய் வடிவமைத்திருக்கும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. க்ரெட்டாவிலும், இன்ஜின் மாற்றங்கள் ஏதுமின்றி காஸ்மெடிக் மாற்றங்கள் மட்டும் மேற்கொண்டு அடுத்த ஆண்டு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஹூண்டாய்.