பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய அப்டேட்டை வெளியிட்டது ஹூண்டாய்!
இந்தியாவில் ஆட்டோமொபைல்களுக்கான பிஎஸ் 6-ன் இரண்டாம் கட்ட மாசுக்கட்டுப்பாட்டுக் கொள்கை இந்த கடந்த ஏப்ரம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதற்கேற்ப தங்களுடைய கார் மாடல்களை சமீபத்தில் தான் அப்டேட் செய்திருந்தது ஹூண்டாய். தற்போது தங்களுடைய கார் மாடல்களில் சிலவற்றை மீண்டும் அப்டேட் செய்து வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். இந்த அப்டேட்டில் பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தியிருக்கிறது ஹூண்டாய். இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக வாகனங்களுக்கான மாசுக்கட்டுப்பாட்டு கொள்கைகளையும், பாதுகாப்பு தரத்தையும் உயர்த்தி வருகிறது மத்திய அரசு. அவ்வப்போது இது குறித்த அறவிப்புகளையும் கடந்த சில ஆண்டுகளாகவே வெளியிட்டு வருகிறார் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.
புதிய பாதுகாப்பு அம்சங்கள்:
அதன்படி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் அனைத்து இருக்கைகளுக்கும் 3-பாய்ண்ட் சீட்பெல்ட், 6 ஏர்பேக்குகள் மற்றும் கிராஷ் டெஸ்டுகள் கட்டாயமாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த விதிமுறைகள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அரசின் இந்த அறிவிப்புகளுக்கு முன்கூட்டியே தயாராகி வருகின்றன் இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்து வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள். அதன் ஒரு பகுதியாகவே தங்களுடைய கிரெட்டா, வென்யூ மற்றும் i-20 ஆகிய கார் மாடல்களில் 3-பாய்ண்ட் சீட் பெல்ட்கள் மற்றும் அட்ஜஸ்டபிள் ரியர் ஹெட்ரெஸ்ட்கள் ஆகிய அம்சங்களை புதிய அப்டேட்டில் வழங்கியிருக்கிறது ஹூண்டாய். மேலும், கிரெட்டாவில் 2-ஸ்டெப் ரெக்லைனிங் ஸீட் ஆப்ஷனையும் வழங்யிருக்கிறது ஹூண்டாய்.