இந்தியாவில் உயர்ந்து வரும் ஹைபிரிட் வாகன விற்பனை, ஏன்?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் வாகன வெளியீடுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால், அதற்கேற்ற முழுமையான கட்டமைப்பு இன்னும் உருவாக்கப்படவில்லை.
பெட்ரோல்/டீசல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் என நினைப்பவர்களுக்கு பெரிய தடையாக இருப்பது எலெக்ட்ரிக் வாகனக் கட்டமைப்பு தான்.
இந்த நிலையில் தான், மேற்கூறிய இரண்டிற்கும் இடைப்பட்ட ஹைபிரிட் வாகனங்கள் கவனம் பெறத் தொடங்குகின்றன. எலெக்ட்ரிக் வானகமாகவும் இயங்கும், பெட்ரோல்/டீசலிலும் இயங்கும் எனப்படும் இந்த வகை ஹைபிரிட் வாகனங்கள் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறது.
கடந்தாண்டு அக்டோபர் முதல் இந்தாண்டு மே மாதம் வரை 48,991 எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டிருக்கும் நிலையில், 48,424 ஹைபிரிட் வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டோமொபைல்
ஹைபிரிட் வாகனங்களின் வளர்ச்சி:
எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனைக்கு நிகராகவே ஹைபிரிட் வாகனங்களின் விற்பனை இருக்கிறது என்றாலும், தற்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 3 முதல் 4 ஹைபிரிட் மாடல்களே விற்பனையில் இருப்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கட்டமைப்பு முழுமையாகும் வரை ஹைபிரிட் வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனப் பிரியர்கள் தேர்வுப் பட்டியலில் கட்டாயம் இடம்பிடிக்கும்.
எலெக்ட்ரிக் வாகனங்களின் மேல் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும், அதன் சுவையை உணரவும் ஹைபிரிட் வாகனங்கள் வழிவகை செய்கின்றன.
இந்திய ஆட்டோமொபைல் சந்தை, பெட்ரோல்/டீசல் வாகனப் பயன்பாட்டில் இருந்து எலெக்ட்ரிக்காக மாறுவதில் இந்த ஹைபிரிட் வாகனங்கள் முக்கியப் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனி வரும் காலங்களில், எலெக்ட்ரிக் வாகனங்களுடன் புதிய ஸ்ட்ராங் ஹைபிரிட் மாடல்களின் வெளியீடுகளையும் இந்தியாவில் நாம் எதிர்பார்க்கலாம்.