செப்டம்பர் 4ல் இந்தியாவில் வெளியாகிறது ஹோண்டாவின் புதிய எலிவேட்
கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய தங்களுடைய புதிய மிட்சைஸ் எஸ்யூவியான 'எலிவேட்'டை, வரும் செப்டம்பர் 4-ம் தேதி இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஹோண்டா. SV, V, VX மற்றும் ZX என நான்கு ட்ரிம்களில் எலிவேட்டை இந்தியாவில் வெளியிடவிருக்கிறது ஹோண்டா. இதில் தொடக்கநிலை ட்ரிம்மான SV-யில் LED ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 16-இன்ச் ஸ்டீல் வீல்கள் மற்றும் டூயல் ஏர்பேக்குகள் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் வளர்ந்து வரும் மிட்சைஸ் எஸ்யூவி பிரிவில், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் மாருதி சுஸூகி கிராண்டு விட்டாரா ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக இந்தப் புதிய எலிவேட்டை விற்பனை செய்யவிருக்கிறது ஹோண்டா.
ஹோண்டா எலிவேட்: இன்ஜின் மற்றும் பிற வசதிகள்
ஹோண்டா சிட்டியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினையே புதிய எலிவேட்டிலும் பயன்படுத்தியிருக்கிறது ஹோண்டா. இந்த இன்ஜினானது, 121hp பவர் மற்றும் 145Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு CVT ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பார்ஸ் தேர்வுகளை அளித்திருக்கிறது ஹோண்டா. இதன் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்டானது 15.31 கிமீ மைலேஜூம், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்டானது 16.92 கிமீ மைலேஜூம் கொடுக்கும் எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். எலிவேட்டில் பெட்ரோல் ஹைபிரிட் மாடலை வெளியிடும் திட்டமில்லை எனத் தெரிவித்திருக்கும் ஹோண்டா, எலிவேட்டின் முழுமையான எலெக்ட்ரிக் மாடலை பின்னாளில் அறிமுகம் செய்யும் திட்டம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.