
ஹார்லி டேவிட்சன் X440-யின் இன்ஜினுடன் புதிய 440சிசி பைக்கை உருவாக்கும் ஹீரோ
செய்தி முன்னோட்டம்
நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு நேற்று இந்தியாவில் வெளியானது ஹார்லி டேவிட்சனின் X440 பைக். இந்த புதிய பைக்கை ஹீரோ நிறுவனத்துடன் இணைந்தே ஹார்லி டேவிட்சன் உருவாக்கியிருந்தது.
தற்போது, புதிய 440சிசி பைக் ஒன்றை அடுத்த ஆண்டு ஹீரோ நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஹீரோவின் இந்த புதிய பைக்கில் X440-யின் அதே இன்ஜினே பயன்படுத்தப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனினும், வேறு ட்யூனிங்கில் இந்த 440சிசி இன்ஜினைப் பயன்படுத்தவிருக்கிறது ஹீரோ. மேலும், X440 உருவாக்கப்பட்ட அதே ப்ளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்படவிருக்கிறது ஹீரோவின் புதிய 440சிசி பைக்.
இதன் மூலம் தொடக்கநிலை பைக்குகளின் ராஜாவாக வலம் வரும் ஹீரோ, ஹார்லி டேவிட்சனுடன் கூட்டணி அமைத்து ப்ரீமியம் பைக் செக்மெண்டில் அடியெடுத்து வைக்கவிருக்கிறது.
ஹீரோ
ஹீரோவின் புதிய 440சிசி பைக்:
தற்போது வெளியாகியிருக்கும் ஹார்லி X440-யில் இருந்து தங்களுடைய புதிய பைக்கை வேறுபடுத்திக் காட்டுவதற்காக பல்வேறு மாற்றங்களைச் செய்யவிருக்கிறது ஹீரோ.
மேலும், ஹீரோவின் இந்த புதிய 440சிசி பைக்கானது ஒரு ஸ்போர்ட்டியான நேக்கட் ஸ்ட்ரீட்ஃபைட்டராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹார்லி டேவிட்சனின் X440-யைப் பொருத்தவரையில், இந்தியாவில் அதன் பெரும்பான்மையான விநியோகத்தை ஹீரோ நிறுவனமே கவனித்துக் கொள்ளவிருக்கிறது. மேலும், இந்த புதிய பைக் முழுவதுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, வெளிநாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த ப்ரீமியம் பைக்காக இருந்தாலும் சர்வீஸ் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் குறித்த கவலையின்றி வாடிக்கையாளர்கள் இந்த புதிய X440-ஐ வாங்க முடியும். மேலும் ஹீரோவின் சர்வீஸ் சென்டர்களின் மூலமாகவே புதிய X440-க்கான சர்வீஸும் வழங்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.