எலக்ட்ரிக் கார்கள் மூலம் மீண்டும் இந்திய சந்தையை குறிவைத்து களமிறங்கும் ஃபோர்டு
அமெரிக்காவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, மின்சார வாகனங்கள் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மீண்டும் இந்திய சந்தையில் களமிறங்க பரிசீலித்து வருகிறது. இந்தத் தகவல், நிறுவனத்தின் தலைமையகத்தில் தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் பார்லியின் உலகளாவிய சாத்தியக்கூறுகளுக்கான மதிப்பாய்வு அறிவிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், அதில் உள்ள சில தகவல்கள் கசிந்ததன் அடிப்படையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஃபோர்டு நிறுவனம் 2021இல் இந்தியாவிலிருந்து முற்றிலுமாக விலகியது. ஆனால், இப்போது உள்ளூர் விற்பனை மற்றும் ஏற்றுமதி இரண்டையும் இலக்காகக் கொண்டு புதிய முதலீடுகள் மற்றும் உற்பத்திக்கு தயாராகி வருகிறது.
இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் முந்தைய முதலீடுகள்
ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் 1995 முதல் செயல்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் இந்தியாவில் கணிசமான முதலீட்டை மேற்கொண்டிருந்தது. இதற்கு முன்பு சந்தையில் $2 பில்லியனுக்கும் மேல் முதலீடு செய்திருந்தது. எக்கோஸ்போர்ட் மினி எஸ்யூவி மற்றும் ஃபிகோ போன்ற சிறிய கார்கள் மூலம் கடந்த காலங்களில் ஃபோர்டு நிறுவனம் இந்திய சந்தையில் ஓரளவு இடத்தை தக்கவைத்திருந்தது. எனினும், இதர நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல், கடந்த சில ஆண்டுகளாக தடுமாறி வந்ததோடு, கடந்த ஆண்டு குஜராத்தில் உள்ள தனது மாலையையும் டாடாவிற்கு விற்றுவிட்டது. இந்நிலையில், ஐரோப்பா மற்றும் சீனாவில் தனது வணிகம் சுருங்கி வருவதால், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, எலக்ட்ரிக் கார்கள் மூலம் மீண்டும் களமிறங்க முடிவு செய்துள்ளது.