பெட்ரோல் பங்குகளில் சங்கடம்; ஓட்டுநர்களின் சங்கடத்தைத் தவிர்க்க ஃபோர்டு இன்ஜினியர்கள் செய்த புத்திசாலித்தனமான தீர்வு
செய்தி முன்னோட்டம்
பல கார் ஓட்டுநர்கள் பெட்ரோல் பங்கிற்குச் செல்லும்போது எதிர்கொள்ளும் ஒரு பொதுவான சங்கடம், காரின் எரிபொருள் மூடி எந்தப் பக்கம் இருக்கிறது என்பதுதான். வலது பக்கமா அல்லது இடது பக்கமா என்ற குழப்பத்தில், தவறான பக்கத்தில் காரை நிறுத்திவிட்டு மீண்டும் காரைத் திருப்பி எடுப்பது பலருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். குறிப்பாகப் புதிய கார் வாங்குபவர்கள் அல்லது வாடகைக்குக் கார் எடுப்பவர்கள் இந்தச் சிக்கலை அதிகம் எதிர்கொள்கின்றனர்.
தீர்வு
ஃபோர்டு இன்ஜினியர்களின் எளிமையான தீர்வு
இந்தச் சிறு பிரச்சனைக்கு ஃபோர்டு நிறுவனத்தின் இன்ஜினியர்கள் ஒரு புத்திசாலித்தனமான மற்றும் மிக எளிமையான தீர்வைக் கண்டுபிடித்தனர். இதற்காக அவர்கள் காரின் டேஷ்போர்டில் உள்ள எரிபொருள் மீட்டரில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய்தனர். காரின் எரிபொருள் அளவைக் காட்டும் குறியீட்டிற்கு அருகில் ஒரு சிறிய அம்பு குறியை அறிமுகப்படுத்தினர். இந்தச் சிறிய மாற்றம் ஓட்டுநர்களுக்குப் பெரும் உதவியாக அமைந்தது.
அம்பு குறி
அந்த சிறிய அம்பு குறியின் ரகசியம்
காரின் டேஷ்போர்டில் பெட்ரோல் பங்க் சின்னம் அல்லது கேஜ் குறியீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் அந்தச் சிறிய அம்பு குறி எந்தப் பக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறதோ, அந்தப் பக்கத்தில்தான் காரின் எரிபொருள் நிரப்பும் மூடி இருக்கும். அம்பு இடது பக்கம் இருந்தால் இடது புறமும், வலது பக்கம் இருந்தால் வலது புறமும் பெட்ரோல் டேங்க் இருக்கும் என்பதை இது உணர்த்துகிறது. கார் ஓட்டுநர்கள் காரை விட்டு இறங்காமலேயே, டேஷ்போர்டைப் பார்த்து மிகச் சரியாகப் பெட்ரோல் நிரப்பும் இடத்திற்குச் செல்ல இது உதவுகிறது.
கண்டுபிடிப்பு
உலகளாவிய மாற்றமாக மாறிய கண்டுபிடிப்பு
முதலில் ஃபோர்டு இன்ஜினியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சிறு அம்சம், இன்று உலகின் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி கார் நிறுவனங்களாலும் பின்பற்றப்படுகிறது. ஒரு சிறிய ஐடியா எப்படிப் பல கோடி ஓட்டுநர்களின் அன்றாடச் சிக்கலைத் தீர்க்கிறது என்பதற்கு இதுவே மிகச்சிறந்த உதாரணம். இனி நீங்கள் பெட்ரோல் பங்கிற்குச் செல்லும்போது உங்கள் காரின் டேஷ்போர்டில் இருக்கும் அந்தச் சிறிய அம்பைக் கவனித்துப் பாருங்கள்.