பல வித கூர்க்கா மாடல்களை சோதனை செய்து வரும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம்
2021 செப்டம்பரில் இந்தியாவில் வெளியிடப்பட்டது ஃபோர்ஸ் கூர்க்கா 3-டோர் எஸ்யூவி. அதனைத் தொடர்ந்து 5-டோர் கூர்க்கா ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்ப்பு இருந்து வந்தது. மாருதி நிறுவனமான 5-டோர் ஆஃப்-ரோடரான ஜிம்னியை கடந்த வாரம் வெளியிட்டது. மஹிந்திராவும் 5-டோர் தாரை அடுத்த ஆண்டு வெளியிடவிருக்கும் நிலையில், தங்களுடைய புதிய 5-டோர் கூர்க்காவையுயம் வெளியிடத் தயாராகி வருகிறது ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம். 5-டோர் வடிவிலேயே பல்வேறு விதமான கூர்க்காக்களை சோதனை செய்தும் வருகிறது ஃபோர்ஸ். இதில் எந்த மாடலை அந்நிறுவனம் தயாரிப்புக்குக் கொண்டு செல்லவிருக்கிறது என்பது தெரியவில்லை. ஐந்து, ஆறு மற்றும் ஏழு சீட்களைக் கொண்ட கூர்க்காக்களைக் கூட இந்திய சாலைகளில் சோதனையின் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களில் நம்மால் பார்க்க முடிகிறது.
ஃபோர்ஸ் கூர்க்கா:
கூர்க்கா 5-டோர் மட்டுமல்லாது லைஃப்ஸ்டைல் பிக்கப் மற்றும் ஆறு சீட்கள் கொண்ட கூர்க்கா 3-டோரையும் கூட சோதனையில் இருப்பதை பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டு கூர்க்கா பிக்கப்பை இந்தோநேஷியாவில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காகக் கூட இந்த பிக்கப் மாடலை ஃபோர்ஸ் உருவாக்கி வரலாம் எனத் தெரிகிறது. மேலும், இது இந்தியாவில் வெளியாகும் பட்சத்தில் இசுஸூ வி-கிராஸ் மற்றும் டொயோட்டா ஹைலக்ஸ் ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. கூர்க்கா 3-டோரில் பின்பக்கம் பென்ச் சீட்களுடன் 6 பேர் அமரக்கூடிய வகையிலான புதிய வேரியன்ட் ஒன்றையும் சோதனை செய்து வருகிறது கூர்க்கா. இதனை கூடுதல் வேரியன்ட்டாக மட்டும் அந்நிறுவனம் தங்கள் லைன்அப்பில் சேர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.