2023 EICMA நிகழ்வில் அறிமுகமாகியிருக்கும் இந்திய வெளியீட்டிற்கு சாத்தியமுள்ள புதிய பைக்குகள்
உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிகழ்வுகளுள் ஒன்றாக விளங்கும் EICMA ஆட்டோமொபைல் நிகழ்வு கடந்த நவம்பர் 7ம் தேதி தொடங்கி இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்று வருகிறது. பிற ஆட்டோமொபைல் நிகழ்வுகள் போல இல்லாமல் இருசக்கர வாகனங்களுக்காகவே பிரதானமாக நிகழ்வாக ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது இந்த EICMA நிகழ்வு. உலகின் முன்னணி பைக் தயாரிப்பாளர்களும் தங்களுடைய புதிய பைக்குகளை இந்த EICMA நிகழ்வில் காட்சிப்படுத்துவதும், வெளியிடுவதும் வழக்கம். 2023ம் ஆண்டிற்கான 80வது EICMA நிகழ்வு வரும் நவம்பர் 12ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், இந்த நிகழ்வில் இந்தியாவின் ராயல் என்ஃபீல்டு, அல்ட்ராவைலட் மற்றும் ஹீரோ உள்ளிட்ட பல்வேறு பைக் நிறுவனங்கள் தங்களுடைய புதிய பைக்குகளை வெளியிட்டிருக்கின்றன. அப்படி அறிமுகப்படுத்தப்பட்ட பைக்குகளின் பட்டியல் இது.
புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்:
மேம்படுத்தப்பட்ட அடுத்த தலைமுறை ஹிமாலயன் மாடலை இந்த 2023 EICMA நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. விரைவில் இந்த மாடலை இந்தியாவிலும் வெளியிடவிருக்கிறது அந்நிறுவனம். எல்இடி முகப்பு விளக்குகள், 17 லிட்டர் ப்யூல் டேங்க், ஸ்பிளிட் டைப் எல்இடி பின்பக்க விளக்குகள் மற்றும் ட்யூப்லெஸ் டயர்களுடன் கூடிய க்ராஸ் ஸ்போக் வீல்கள் ஆகிய அம்சங்களை புதிய ஹிமாலயன் மாடலில் வழங்கியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. மேலும், 39hp பவர் மற்றும் 40Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய புதிய 450சிசி இன்ஜினை புதிய ஹிமாலயன் மாடலில் வழங்கியிருக்கிறது அந்நிறுவனம். இத்துடன் டூயல் சேனல் ஏபிஎஸ், ரைடிங் மோடுகள், ஷோவா முன்பக்க இன்வெர்டட் சஸ்பென்ஷன் மற்றும் பின்பக்க மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்டப்பும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அல்ட்ராவைலட் F99 எலெக்ட்ரிக் ரேஸ் பைக்:
பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அல்ட்ராவைலட் நிறுவனம் F99 என்ற எலெக்ட்ரிக் ரேசிங் பைக்கை 2023 EICMA நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. முன்னதாக F77 என்ற வேகமாக செல்லும் திறனுடைய எலெக்ட்ரிக் ஸ்ட்ரீட் பைக் ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. தற்போது இந்த F99 பைக்கானது இந்தியாவின் வேகமான எலெட்ரிக் பைக் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. 121hp பவருடன் அதிகபட்சமாக மணிக்கு 265 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் பைக்கானது லிக்விட் கூல்டு பவர்ட்ரெயினைக் கொண்டிருக்கிறது. இதனை ரேஸ் பைக்காகவே வடிவமைத்திருப்பதால், பைக் ரேஸ்களில் மட்டும் இந்த பைக்கை பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது அல்ட்ராவைலட்.
கவாஸாகி நின்ஜா 500:
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் நின்ஜா 400 மாடலின் அப்கிரேடட் வெர்ஷனான நின்ஜா 500 மாடலை 2023 EICMA நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது கவாஸாகி. நின்ஜா 400 மாடலானது இந்தியாவில் ரூ.5.19 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நின்ஜா 500 மாடலில் எல்இடி முகப்பு மற்றும் பின்பக்க விளக்குகள், சற்று செங்குத்தான விண்டுஸ்கிரீன், கிளிப் ஆன் ஹேண்டில்பார்கள் மற்றும் 14 லிட்டர் ப்யூல் டேங்க் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. 451சிசி ட்வின் சிலிண்டர் இன்ஜினைக் கொண்ட இந்த நின்ஜா 500 பைக்கில் பாதுகாப்பிற்கா டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
சுஸூகி GSX-S1000GX:
பிஎம்டபிள்யூவின் R 1250 GS மாடலுக்கு போட்டியாக புதிய GSX-S1000GX மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது சுஸூகி. புதிய S1000GX மாடலில் எல்இடி ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், சற்று செங்குத்தான வைஸர், மேலே சற்று உயர்த்தி வைக்கப்பட்ட ஹேண்டில் பார், ஸ்பிளிட் சீட் மற்றும் வயர் ஸ்போக் வீல்கள் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. நான்கு இன்லைன் சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு 999 சிசி இன்ஜினை புதிய S1000GX மாடலில் பயன்படுத்தியிருக்கிறது சுஸூகி. பாதுகாப்பிற்காக புதிய பைக்கில் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ், ட்ராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஹீரோ 2.5R கான்செப்ட் பைக்:
இந்த 2023 EICMA நிகழ்வில் ஸூம் 160 மற்றும் ஸூம் 125R என இரண்டு மேக்ஸி ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்தியவைச் சேர்ந்த முன்னணி பைக் தயாரிப்பாளரான ஹீரோ. அதனைத் தவிர்த்து 2.5R என்ற 250சிசி கான்செப்ட் ஸ்டன்ட் பைக் ஒன்றையும் இந்த நிகழ்விவ் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹீரோ. சமீபத்தில் இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிட்ட கரிஸ்மா XMR மாடலையொட்டியே புதிய 2.5R மாடலை ஹீரோ வடிவமைத்திருக்கிறது. இந்த பைக்கின் தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், விரைவில் 2.5R-ன் தயாரிப்பு வடிவத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரிஸ்மா XMR-ல் பயன்படுத்தப்பட்ட 210 சிசி லிக்விட்-கூல்டு இன்ஜினையோ 2.5R கான்செப்ட் மாடலிலும் ஹீரோ பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.